2013-06-05 17:02:03

கத்தோலிக்கர் அனைவரோடும் திருநற்கருணை ஆராதனையில் கலந்துகொண்டது, இந்தியத் திருஅவைக்கு தனிப்பட்ட ஓர் உணர்வாக இருந்தது - கர்தினால் Oswald Gracias


ஜூன்,05,2013. பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனும், உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர் அனைவரோடும் திருநற்கருணை ஆராதனையில் கலந்துகொண்டது, இந்தியத் திருஅவைக்கு தனிப்பட்ட ஓர் உணர்வாக இருந்தது என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
ஜூன் 2ம் தேதி கடந்த ஞாயிறன்று உலகெங்கும் உள்ள பல கத்தோலிக்கக் கோவில்களில் ஒரே நேரத்தில் நிகழ்ந்த திரு நற்கருணை ஆராதனையைக் குறித்து Fides செய்திக்கு மும்பைப் பேராயர் கர்தினால் Gracias அனுப்பியச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
உலகப் பிரச்சனைகளைக் குறித்து செபங்களை எழுப்பும்படி திருத்தந்தை விடுத்த அழைப்பின் பேரில், இந்தியத் திருஅவை, பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் குறித்து செபங்களை எழுப்பியது என்று கர்தினால் Gracias சுட்டிக்காட்டினார்.
2008ம் ஆண்டு ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், அப்பகுதியில் உள்ள Dibyajyoti மேய்ப்புப்பணி மையத்தில் திரு நற்கருணை ஆராதனை மேற்கொள்ளப்பட்டது என்பதை கர்தினால் Gracias சிறப்பாகக் குறிப்பிட்டார்.
ஆண் பெண் என்ற இரு பாலருக்கும் இடையே சம உரிமைகள் நிலவுவதற்கும், கல்வி வழியாக வறியோர் இன்னும் அதிக வலிமை பெறுவதற்கும் இந்தியத் திருஅவை தொடர்ந்து உழைக்கும் என்று கர்தினால் Gracias, தான் அனுப்பியச் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.