2013-06-05 17:00:58

அருள்பணியாளர்களைப் புனிதப்படுத்தும் நாளையொட்டி, கர்தினால் Mauro Piacenza அவர்களின் மடல்


ஜூன்,05,2013. இறைமக்கள் மீது அருள்பணியாளர்கள் கொள்ளும் அன்பு, மனித முயற்சிகளால் உருவாகும் அன்பு அல்ல, என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளதை நாம் அனைவரும் மனதில் கொள்வோம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 7ம் தேதி, வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் இயேசுவின் மிகப் புனிதமான இருதயத் திருநாளை, அருள்பணியாளர்களைப் புனிதப்படுத்தும் நாள் என்று முத்திப் பேறுபெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1995ம் ஆண்டு உருவாக்கினார்.
இந்தச் சிறப்பு நாளையொட்டி, அருள் பணியாளர்களின் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza அவர்கள், குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இளையோருக்கு எழுதிய மடல் ஒன்றில், அருள் பணியாளர்களிடம் இவ்வுலகம் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களைக் குறித்து சிந்தனைகளைத் தொகுத்துக் கூறியுள்ளார்.
மக்களின் நலனில் அக்கறை காட்டாமல், தன்னுடையத் திறமைகளை வளர்ப்பதில் நேரத்தைச் செலவிடும் அருள் பணியாளர், திரு அவையால் எதிர்பார்க்கப்படும் குரு அல்ல என்பதை கர்தினால் Piacenza தன் மடலில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
1856ம் ஆண்டு, திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட இயேசுவின் மிகப் புனிதமான இருதயத் திருநாள், கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவுக்கு அடுத்த வெள்ளியன்று கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.