2013-06-05 16:59:12

Buenos Airesல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்திய ஒரு புகைப்படக் கண்காட்சி


ஜூன்,05,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்திய ஒரு புகைப்படக் கண்காட்சி, Buenos Airesல் உள்ள Santa Catalina என்ற துறவு மடத்தில் ஜூன் 3, இத்திங்களன்று துவங்கியது.
"பிரான்சிஸ்: Buenos Aires ஊழியர், உலகத்தின் ஊழியர்" என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராக இருந்தபோது ஆற்றிய பல பணிகளை காட்டும் 25 புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Enrique Cangas என்ற புகைப்படக் கலைஞரின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, எவ்வித நுழைவு கட்டணமும் இல்லாமல், மக்களின் பார்வைக்கு இம்மாதம் 28ம் தேதி முடிய வைக்கப்பட்டிருக்கும் என்று வத்திக்கான் செய்தி அலுவலகம் அறிவித்துள்ளது.
Penna என்ற மருத்துவமனையில், வயதான ஒரு பெண்ணின் காலடிகளை கழுவுதல், Roca பூங்கா என்ற இடத்தில் குழந்தைகளுக்கு ஆற்றியத் திருப்பலி, என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராக இருந்தபோது மேற்கொண்ட பல பணிகளின் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்றும், இவை, இதுவரை பத்திரிக்கைகளில் வெளிவராத படங்கள் என்றும் புகைப்படக் கலைஞர் Cangas கூறினார்.

ஆதாரம் : VIS / SeDoc








All the contents on this site are copyrighted ©.