2013-06-04 16:38:11

திருத்தந்தை பிரான்சிஸ் : வெளிவேடம் ஊழல்வாதிகளின் மொழி


ஜூன்,04,2013. வெளிவேடக்காரர்கள், அனைத்துச் சரியான காரியங்களையும் சொல்லலாம், ஆனால் அவை தவறான காரணங்களுக்காகச் சொல்லப்படும் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெளிவேடத்துக்கு இட்டுச்செல்லும் சமூக மொழியை ஒரு கிறிஸ்தவர் பயன்படுத்தக் கூடாது, மாறாக, ஒரு குழந்தையின் ஒளிவுமறைவற்ற பண்புடன் நற்செய்தியின் உண்மையைப் பேச வேண்டும், அன்பின்றி உண்மை கிடையாது, அன்பே முதல் உண்மை என்றும் கூறினார் திருத்தந்தை.
புனித மார்த்தா இல்லத்தின் ஆலயத்தில் இச்செவ்வாய் காலை 7 மணிக்கு நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், ஊழலின் மொழியே வெளிவேடம் என்றும் கூறினார்.
சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா என்று பரிசேயர்களின் ஆட்கள் இயேசுவிடம் கனிந்த, அழகான, இனிய வார்த்தைகளால் கேட்டு அவரின் நண்பர்கள் போன்று காட்டிக்கொள்ள முயற்சித்தனர், ஆனால் அது போலியானது, ஏனெனில் அவர்கள் உண்மையை அன்பு செய்யவில்லை, மாறாக, தங்களையே அன்பு செய்தனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்களின் மொழி ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் இருக்க வேண்டும், ஏனெனில் ஊழலின் மொழி வெளிவேடம் என்றும் கூறினார் திருத்தந்தை.
நாம் அன்போடு உண்மையைப் பேசுகின்றோமா என்று இன்று சிந்திப்போம், நமது மொழி, எளிமையான, குழந்தையின் மொழியாக, கடவுளின் பிள்ளைகளின் மொழியாக, அன்பில் உண்மையின் மொழியாக இருப்பதற்கு நம் ஆண்டவரிடம் செபிப்போம் எனத் தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலங்கையின் Kandy ஆயர் Vianney Fernando, அர்மேனிய முதுபெரும் தலைவர் Nerses Bedros XIX Tarmouni, இன்னும் சிலர் திருத்தந்தையுடன் கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.