2013-06-04 16:18:21

ஜூன் 05, உலகச் சுற்றுச்சூழல் நாள்


ஜூன் 5, இப்புதனன்று உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. 1973ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP - United Nations Environmental Programme) ஆரம்பித்துவைத்த இந்த உலக நாளுக்கு இன்று 40 வயதாகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த உலக நாள் வெவ்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஒரு கொண்டாட்டம் என்று சொல்வதற்குப் பதில், ஓர் எச்சரிக்கை என்று சொல்லலாம்.
2011ம் ஆண்டு, சுற்றுச்சூழல் நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டபோது, 'Forest: Nature at your service' - "காடு: இயற்கை உங்களுக்குச் சேவைபுரிய" என்பது மையக் கருத்தாக இருந்தது. 2012ம் ஆண்டு இந்த நாள் பிரேசில் நாட்டில் கொண்டாடப்பட்டபோது, இந்நாளின் மையக் கருத்து - Green Economy : Does it include you ? - பசுமைப் பொருளாதாரம் : அதில் நீயும் இணைக்கப்பட்டுள்ளாயா?
இவ்வாண்டு, மங்கோலியாவில் கொண்டாடப்படும் உலகச் சுற்றுச்சூழல் நாளின் மையக் கருத்து – Think. Eat. Save. Reduce Foodprint - சிந்திப்பாய். சாப்பிடுவாய். சேமிப்பாய். உணவுச் சவடுகளைக் குறைப்பாய். உலகில் இன்று வீணாக்கப்படும் உணவு மையக் கருத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகில் வீணாகும் உணவைக் குறித்து ஐ.நா.வின் உணவு வேளாண்மை நிறுவனமான (FAO) தரும் தகவல்கள் நம்மை அதிர்ச்சியுறச் செய்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் 130 கோடி டன் எடையுள்ள உணவு வீணாகிறது. அதே நேரம், உலகின் 100 கோடி மக்கள் (அதாவது, உலக மக்கள் தொகையில் ஏழுபேரில் ஒருவர்) உண்பதற்கு ஏதுமில்லாமல், பசியோடு உறங்கச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், உலகில் 5 வயதுக்குட்பட்ட 20,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர். வீணாகும் உணவு, இல்லாதவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் பல ஆண்டுகள் நிறைவுடன் வாழ முடியும். பட்டினிச் சாவுகளை இவ்வுலகில் அறவே ஒழிக்கமுடியும்.
நாம் ஒவ்வொருவரும் எவ்வகை உணவு உண்கிறோம், உணவை, எந்த அளவு தயாரிக்கிறோம், வீணாக்குகிறோம் என்பதை ஆய்வுசெய்து, தகுந்த முடிவுகள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ஐ.நா. இவ்வாண்டின் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கு, "சிந்திப்பாய். சாப்பிடுவாய். சேமிப்பாய்" என்ற கருத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
எடுத்துக்காட்டாக, நாம் ஒவ்வொரு முறையும் உணவை வீணாக்கும்போதும், அந்த உணவுக்குப் பின்னணியில், எத்தனை கோடி மக்கள் உணவின்றி உறங்கச் செல்கின்றனர் என்பதைச் சிந்திக்க வேண்டும். நாம் தயாரிக்கும் உணவின் மூலப் பொருட்கள் உள்ளூரில், இயற்கை வழிகளில் விளைந்தனவா? அல்லது, எரிபொருளைப் பயன்படுத்தி, வேற்று நாட்டிலிருந்து, அல்லது, வெகு தூரத்திலிருந்து கொணரப்பட்டனவா? என்பதைச் சிந்தித்து, உள்ளூரில், இயற்கை வழிகளில் வளர்ந்தனவற்றை ஆதரிக்க வேண்டும். சிந்திப்பாய். சாப்பிடுவாய். சேமிப்பாய். உணவுச் சவடுகளைக் குறைப்பாய்.
ஆதாரம்: Wikipedia








All the contents on this site are copyrighted ©.