2013-06-03 16:13:39

வாரம் ஓர் அலசல் – போர், மனித சமுதாயத்தின் தற்கொலை


ஜூன்,03,2013 RealAudioMP3 . “போர், மனித சமுதாயத்தின் தற்கொலை. ஏனெனில் இது இதயத்தைக் கொலை செய்கின்றது, இது அன்பைக் கொலை செய்கின்றது, பைத்தியக்காரத்தனமான இந்தப் போர்களுக்காக இறைவன் அழுகின்றார்” என்று மிகுந்த வேதனையுடன் இஞ்ஞாயிறு காலையில் சொல்லியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். போர் இடம்பெறும் பகுதிகளில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்ட இத்தாலியப் படைவீரர்களின் உறவினர்கள், அப்பணிகளில் காயமடைந்த படைவீரர்கள் என ஏறக்குறைய 80 பேருக்கு இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிகழ்த்தியபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1946ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி இத்தாலியக் குடியரசுக்கு அடித்தளம் இடப்பட்ட நாள். இந்நாளை இத்திருப்பலியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நாள், இந்நாளில் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு, நாடு அன்புக்கடன்பட்டுள்ளது. பைத்தியக்காரத்தனமான போரில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், இறந்தவர்கள் ஆகிய அனைவருக்காகவும் செபிப்போம் என்றும் கூறினார். போர், மனித சமுதாயத்தின் தற்கொலை. இது இதயத்தைக் கொலை செய்கின்றது, இது அன்பைக் கொலை செய்கின்றது. ஏனெனில் போர், வெறுப்பு, பொறாமை, அதிகாரத்துக்கு ஆசை ஆகியவற்றிலிருந்து எழுகின்றது.
இஞ்ஞாயிறன்று மீண்டும் ஒரு தடவை இவ்வுலகில் இடம்பெறும் போர்கள் குறித்த வேதனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு மூவேளை செப உரை ஆற்றியபின்னர், சிரியாவில் கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் சண்டை குறித்த, குறிப்பாக, நீதியான அமைதியையும், புரிந்துகொள்ளுதலையும் எதிர்நோக்கும் துன்புறும் அப்பாவி குடிமக்கள் குறித்த கவலையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தத் துன்பகரமான சூழல், மரணத்தையும், அழிவையும், குறிப்பிடத்தக்கப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களையும், கடத்தலின் வடுக்களையும் கொண்டு வந்துள்ளது. சண்டையினால் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பின்மையும், ஒழுங்கற்ற நிலையும் பல கடத்தல்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தக் கடத்தல்கள், பொருளாதாரக் காரணங்கள் மற்றும் பிணையல்தொகை கேட்டு இடம்பெற்றிருப்பதாகத் தெரிகின்றது. மேலும் பல கடத்தல்கள், இனவாதப் பழிவாங்குதல் அல்லது மதத் தீவிரவாதத்தோடு தொடர்புடையதாகத் தெரிகின்றன. சிரியாவின் அலெப்போ ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahim, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos Yaziji ஆகிய இருவரும் ஒரு மாதத்துக்கு மேலாகக் கடத்தி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், இத்தாலிய பத்திரிகையாளர் Domenico Quirico போன்ற பலர் காணாமற்போயுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 12ம் பத்திநாதர் சொன்னது போல அனைத்தும் சண்டையில் இழக்கப்படுகின்றன. அனைத்தும் அமைதியின் வழியாகக் கிடைக்கின்றன"(Everything is lost with war, everything is gained through peace"), போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் இப்போது அமைதியில் செபிப்போம் என்று சொல்லி சிறிது நேரம் மௌனமாக இருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அனைவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்து செபித்தனர். மேலும், பல்வேறு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அண்மையில் எடுக்கப்பட்டுள்ள ஒப்புரவு மற்றும் அமைதிக்கான நடவடிக்கைகளையும் ஊக்குவித்தார். இஞ்ஞாயிறு மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமை வகித்து நடத்திய ஒரு மணிநேர திருநற்கருணை ஆராதனையிலும், அடிமைத்தனம், போர், மனித வர்த்தகம், போதைப்பொருள் வணிகம், அடிமைத்தொழில் ஆகியவற்றால் துன்புறுவோருக்காக அனைவரும் செபிக்கத் தூண்டினார்.
அன்பு நெஞ்சங்களே, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை, போர் ஆகிய இரண்டு பிரச்சனைகள் குறித்தே கவனம் செலுத்தியிருக்கிறார். உலகில் வன்முறைகளும், போர்களும் நிறுத்தப்படவும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர் செபித்தார். நம் அனைவரையும் செபிக்குமாறு கேட்டார். இஞ்ஞாயிறன்று பிபிசி போன்ற ஊடகங்களில் சிரியாவில் இடம்பெறும் சண்டை, துருக்கியில் இடம்பெறும் அரசு எதிர்ப்புப் போராட்டம் போன்றவை குறித்தே செய்திகள் தடித்த எழுத்துக்களில் பிரசுரமாகியிருந்தன. துருக்கியின் Istanbul மற்றும் Ankara நகரங்களில் கடந்த இரு நாள்களாக அரசுக்கு எதிராக வன்முறைப் பேரணிகள் நடத்தப்பட்டன. துருக்கி, சமயச் சார்பற்ற நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பழமைவாத இசுலாமிய மதிப்பீடுகளை வலியுறுத்த அந்நாட்டு அரசு விரும்புகின்றது என்று எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
துருக்கியின் அண்டை நாடான சிரியாவில், அரசுத்தலைவர் Bashar al-Assadவின் குடும்பம் 1971ம் ஆண்டிலிருந்து அரசுத்தலைவர் பதவியை வகித்து வருகிறது. எனவே அவரின் Ba'ath கட்சியின் 40 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக புரட்சியாளர்கள் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். 2011ம் ஆண்டு மார்ச் 15ம் தேதியன்று தொடங்கிய இம்மோதல்களில் இதுவரை 80,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 15 இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கணக்கிட்டுள்ளது. சிரியாவின் இந்த உள்நாட்டுச் சண்டை, தற்போது லெபனன் நாட்டுக்குள்ளும் நுழைந்துள்ளதாக இஞ்ஞாயிறு செய்திகள் கூறுகின்றன. சிரியாவில் போரிடும் புரட்சிக்குழுக்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டுமென ஒரு பக்கம் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. மறுபக்கம் லெபனன் நாட்டு Hezbollah இசுலாமியத் தீவிரவாதக் குழு சிரியா அரசு இராணுவத்துடன் சேர்ந்து போரிட்டு வருகிறது. உலகில் நன்மனம் கொண்டோர் அமைதிக்கும் ஆயுதங்களைக் கைவிடவும் தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவது ஒருபுறமிருக்க, சிரியாவில் சண்டை வீரியம் அடைவதாகவே ஊடகச் செய்திகள் ஊகிக்க வைக்கின்றன. மேலும், ஈராக்கில் இந்த மே மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஏறக்குறைய சுமார் 2,400 பேர்வரை காயமடைந்திருப்பதாகவும் ஐ.நா. கூறுகிறது. மேலும், ஈராக்கில் அல்கெய்தா தீவிரவாதிகளின் இரசாயன வாயு உற்பத்தி ஆலை செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இஞ்ஞாயிறு செய்திகள் கூறுகின்றன.
இன்று நாடுகளில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்முறைகளைப் பார்க்கும்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் ஆற்றிய மறையுரை மீண்டும் நம் நினைவுக்கு வருகிறது. அதிகாரத்துக்கு தாகம் கொள்வதிலிருந்து சண்டை பிறப்பதை நாம் பல தடவைகளில் பார்த்திருக்கிறோம். இப்பூமியின் பெரிய தலைகள், உள்ளூர் பிரச்சனைகளை, பொருளாதாரப் பிரச்சனைகளை, பொருளாதார நெருக்கடிகளை சண்டையுடன் தீர்வு காண விரும்புவதையும் பல தடவைகள் நாம் பார்த்திருக்கிறோம்; ஏன் இப்படி நிகழ்கின்றது? ஏனெனில் இவர்களுக்கு மக்களைவிட பணம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது! போரும் இப்படித்தான். இது பணத்தில் பற்று வைக்கும் செயலாகும். போர், சிலைவழிபாடுகளில், வெறுப்பின் சிலைவழிபாடுகளில், ஒருவரின் சகோதரரைக் கொலைசெய்யும் சிலைவழிபாடுகளில் பற்றுவைக்கும் செயலாகும். இது அன்பைக் கொலை செய்வதற்கு இட்டுச் செல்கின்றது. தனது சகோதரன் ஆபேலை, பொறாமையால் கொன்ற காயினிடம் நம் தந்தையாம் கடவுள், உன் சகோதரன் எங்கே? என்று கேட்ட சொற்கள் இன்று நினைவுக்கு வருகின்றன. நமது பைத்தியக்கராத்தனமான சண்டைகளுக்காக, நம் தந்தையாம் கடவுள் அழுகிறார். உன் சகோதரன் எங்கே? நீ என்ன செய்தாய்? என்று இறைவன் நம் அனைவரையும் பார்த்து கேட்பதை நம்மால் இன்று கேட்க முடிகின்றது. அனைத்துத் தீமைகளையும் நம்மிடமிருந்து ஆண்டவர் அகற்றிவிடுமாறு இன்று செபிப்போம், ஏனெனில் போருக்குப் பின்னால் எப்போதும் பாவங்கள் இருக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு காலைத் திருப்பலியில் கூறினார்.
பணத்தை வழிபடுதல், மனிதரை மையப்படுத்தாமல் பணத்தை மையப்படுத்துதல், அதிகாரத்துக்குத் தாகம் கொள்ளுதல் போன்ற இவைகளே சண்டைகளுக்கு முக்கிய காரணங்கள். அத்துடன், பிரச்சனைகளுக்கு ஆயுதங்களால் தீர்வு காண முற்படுதலும் ஒரு காரணம். பணம் என்று சொல்லும்போது இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உயிரோடிப்பவர்கள் பலருக்கு அரசிடமிருந்து இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக வாசித்த செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது. அந்த முதியவர்களின் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்பதற்காக மனசாட்சியில்லாத உறவுக்காரர்கள் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்ந்லையில் திராஜி தேவி என்ற 78 வயது மூதாட்டி, தான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். செத்துப் பிழைத்தவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் உயிரோடிருந்தும் இறந்துவிட்டதாக இப்பொழுது கேள்விப்படுகிறோம். என்ன கொடுமை இது?
அடர்ந்த காட்டுப் பாதையில் முதியவர் ஒருவர் தடியோடு போய்க் கொண்டிருந்தார். அவரோடு ஓர் இளைஞரும் சேர்நது கொண்டார். இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். வழியில் ஒரு பெரிய பாம்பைப் பார்த்ததும் அலறியடித்து பின்னோக்கி ஓடி நடுங்கியபடி நின்றார் இளைஞர். ஆனால் முதியவரோ எதுவும் நடக்காததுபோல ஒதுங்கி நடந்து போனார். நடுங்கியபடி இளைஞர் முதியவரிடம், பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், நீங்கள் நடுங்காமல் நடக்கிறீர்களே என்று கேட்டார். பாம்பைக் கண்டால் படை ஏன் நடுங்க வேண்டும், அது ஒன்றும் ஆபத்தில்லையே என்றார் முதியவர். கொஞ்ச தூரம் இருவரும் நடந்தனர். வழியில் ஒரு 500 ரூபாய் நோட்டுக் கேட்பாரற்றுக் கிடந்தது. பார்த்ததுதான் தாமதம். தடியைப் போட்டுவிட்டு பின்னோக்கி ஓடி நடுங்கியபடி நின்றார் முதியவர். ஐயோ பணம் பணம் என்று அலறினார் முதியவர். நடுங்கியபடி நின்ற முதியவரிடம் இளைஞர் கேட்டார், என்ன பெரியவரே, பாம்பைக் கண்டு நடுங்காதவர் பணத்தைக் கண்டு நடுங்குகிறீர்கள் என்று.
முதியவர் சொன்னார் - நீ தொந்தரவு செய்யாதவரையில் பாம்பு பக்கத்திலிருந்தாலும் பாதகமில்லை. ஆபத்தில்லை. ஆனால், பாம்பு தீண்டினால் விசம். பணம் தீண்டாமலே விசம் என்று. அன்பு நெஞ்சங்களே, பணத்தை வழிபட வேண்டாம், அதிகாரத்துக்குத் தாகம் கொள்ள வேண்டாம். இவை வன்முறைக்கு வழிசொல்லும். போர், மனித சமுதாயத்தின் தற்கொலை, போர் குறித்து இறைவன் கண்ணீர் சிந்துகிறார்








All the contents on this site are copyrighted ©.