2013-06-03 17:43:25

சிரியாவிற்காகச் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


ஜூன்,03,2013. சிரியாவில் கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் சண்டை குறித்த, குறிப்பாக, நீதியான அமைதியையும், புரிந்துகொள்ளுதலையும் எதிர்நோக்கும் துன்புறும் அப்பாவி குடிமக்கள் குறித்த கவலையையும் வருத்தத்தையும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் வெளிப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தத் துன்பகரமான சூழல், மரணத்தையும், அழிவையும், குறிப்பிடத்தக்கப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சேதங்களையும், கடத்தலின் வடுக்களையும் கொண்டு வந்துள்ளது என்ற திருத்தந்தை, இந்தக் கடத்தல்களின் பின்னால் உள்ள பொருளாதாரக் காரணங்கள், பிணையல்தொகை கேட்டல், இனவாதப் பழிவாங்குதல் அல்லது மதத் தீவிரவாதம் போன்றவைகளைச் சுட்டிக்காட்டினார்.
சிரியாவின் அலெப்போ ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahim, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos Yaziji ஆகிய இருவரும் ஒரு மாதத்துக்கு மேலாகக் கடத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களுடன், இத்தாலிய பத்திரிகையாளர் Domenico Quirico போன்ற பலர் காணாமற்போயுள்ளனர் என்றும் கூறினார்.
இஞ்ஞாயிறு மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமை வகித்து நடத்திய ஒரு மணிநேர திருநற்கருணை ஆராதனையிலும், அடிமைத்தனம், போர், மனித வர்த்தகம், போதைப்பொருள் வணிகம், அடிமைத்தொழில் ஆகியவற்றால் துன்புறுவோருக்காக அனைவரும் செபிக்குமாறுக் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.