2013-06-03 16:13:34

கற்றனைத்தூறும்..... Ōkunoshima முயல் தீவு


ஜப்பானியப் பேரரசு காலத்தில் வேதிய ஆயுதங்கள் தயாரிப்பதற்கு இரகசியமாகப் பயன்படுத்தப்பட்ட Ōkunoshima என்ற சிறிய தீவு, தற்போது நூற்றுக்கணக்கான முயல்களின் உறைவிடமாகச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. மனிதர்கள் வாழாத இந்த Ōkunoshima தீவு, தற்போது Usagi Shima அதாவது முயல் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய 4 கிலோ மீட்டர் நீளமுள்ள Ōkunoshima தீவில் ஏறக்குறைய 300 காட்டு முயல்கள் வாழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. 1971ம் ஆண்டில் கைவிடப்பட்ட 8 முயல்களின் வாரிசுகளே இம்முயல்கள். இவை மூர்க்கத்தன்மையற்று மிக எளிதில் மனிதர்களை அணுகுகின்றன. ஹிரோஷிமா மாநகராட்சியின் கீழுள்ள Ōkunoshima தீவு, 1929ம் ஆண்டுக்கும் 1945ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜப்பானியப் பேரரசின் இராணுவத்தின் வேதிய ஆயுதத் தொழிற்சாலையாகச் செயல்பட்டு வந்தது. ஜப்பானியப் பேரரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், நச்சாவி நீர்ம வகை, ஹைட்ரஜன் சையனைட், வெள்ளை பாஸ்பரஸ் கண்ணீர்ப்புகைகள் போன்ற ஆறாயிரம் கிலோவுக்கு அதிகமான நச்சு கலந்த வேதிய ஆயுதங்களை இத்தீவில் தயாரித்தது. 1931ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுவரை ஜப்பானியப் பேரரசு வட சீனாவை ஆக்ரமித்திருந்த சமயத்தில் குறைந்தது 889 வேதிய ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்திவீல் வளர்க்கப்பட்ட பல முயல்கள் இந்த வேதிய ஆயுதங்களின் தாக்கத்தைப் பரிசோதனை செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன. எனினும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானியப் பேரரசு சரணடைந்தபோது அந்தத் தொழிற்சாலை அழிக்கப்பட்டது. இந்த முயல்களும் கொல்லப்பட்டன. இந்தத் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எரிக்கப்பட்டன. நேச நாடுகள் இங்கிருந்த நச்சுவாயுவை செயலிழக்கச் செய்தன. 1988ம் ஆண்டில் Ōkunoshima நச்சுவாயு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தற்போது அத்தீவிலுள்ள முயல்களுக்கும், வேதிய ஆயுதப் பரிசோதனைக்குப் பயன்படுத்தப்படுத்த முயல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று இந்த நச்சு வாயு அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனர் Murakami சொல்லியிருக்கிறார்.
இத்தொழிற்சாலையில் ஆறாயிரம் பேர் வேலை செய்தனர். ஆயினும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் அதில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களுக்கும் அங்கு என்ன தயாரிக்கப்படுகிறது என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டது. பலர் நச்சு வாயு தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டனர்..

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.