2013-06-01 16:52:56

வத்திக்கான் : பெற்றோர், நவீனகாலத்தை உருவாக்குவதில் முக்கிய காரணிகள்


ஜூன்,01,2013. ஐக்கிய நாடுகள் நிறுவனம் அனைத்துலகப் பெற்றோர் தினத்தை அறிவித்திருப்பது மிகவும் சக்திமிக்க முயற்சி எனத் தான் கருதுவதாக, திருப்பீட குடும்ப அவையின் செயலர் பேரருள்திரு Jean Laffitte கூறினார்.
ஜூன்01, இச்சனிக்கிழமையன்று முதல் அனைத்துலக பெற்றோர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு Romereports என்ற ஊடகத்துக்குப் பேட்டியளித்த பேரருள்திரு Laffitte, பிள்ளைகளை வளர்த்துப் பாதுகாப்பதில் குடும்பத்துக்கு முதன்மையான பொறுப்பு உள்ளது என்று ஐக்கிய நாடுகள் நிறுவன ஆவணத்தில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே நிலவும் உறவு, இளம் தலைமுறைகளுக்கான நமது கடமை போன்றவை குறித்துச் சிந்திப்பதற்கு இந்நாள் நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்றுரைத்த பேரருள்திரு Laffitte, பெற்றோர்தன்மையின் அடிப்படையிலும், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் அன்பின் அடிப்படையிலும் இக்கேள்விகளுக்கான பதில்கள் காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அன்றாட வாழ்வில் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் பல சவால்களை எதிர்கொள்ளும் தாய்மாரையும் தந்தையரையும் கௌரவிப்பதாக இந்த அனைத்துலகப் பெற்றோர் தினம் அமைந்துள்ளது என்றும் திருப்பீட குடும்ப அவையின் செயலர் கூறினார்.
உலகில் அனைத்துப் பெற்றோருக்கும் மரியாதை செலுத்தும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனப் பொது அவை இந்த அனைத்துலகப் பெற்றோர் நாளை 2012ம் ஆண்டில் கொண்டுவந்தது.

ஆதாரம் : Romereports







All the contents on this site are copyrighted ©.