2013-06-01 16:07:34

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஜூன் 2, இஞ்ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவை தனித்துவம் மிகுந்ததொரு வரலாறு படைக்கவிருக்கிறது. 'வரலாறு படைத்தல்' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், பிரம்மாண்டமான, பரபரப்பான, ஆர்ப்பாட்டமான, ஆரவாரம் மிகுந்த ஏதோ ஒன்று நிகழ்ப்போவதாக நமது எண்ணங்கள் பல திசைகளில் ஓடியிருக்கும். அவ்வகை எண்ணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, நாம் படைக்கவிருக்கும் வரலாற்று நிகழ்வை பணிவோடு, பக்தியோடு அணுகுவோம்.
ஆம், அன்புள்ளங்களே, இந்த ஞாயிறு கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தத்தின் திருவிழா. இந்த ஆண்டு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூடியதன் 50ம் ஆண்டு என்பதால், இதை 'நம்பிக்கை ஆண்டு என்று கொண்டாடிவருகிறோம். இவ்விரு கொண்டாட்டங்களையும் அர்த்தமுள்ள வகையில் இணைக்க, கத்தோலிக்கத் திருஅவை, இந்த வரலாற்று நிகழ்வை மேற்கொண்டுள்ளது.
இந்த ஞாயிறன்று, உரோம் நகரில் மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருநற்கருணை ஆராதனை ஆரம்பமாகிறது. ஒரு மணிநேரம் நிகழும் இந்த ஆராதனையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துகிறார். உரோம் நகரில் மாலை 5 மணியாகும் அதே தருணத்தில், உலகின் பல நாடுகளில், கோடிக்கணக்கான கத்தோலிக்கர்கள், அவரவர் பங்குக் கோவில்களில், துறவு இல்லங்களில் இந்த ஆராதனையை நடத்த அழைக்கப்பட்டுள்ளோம். உலகில் இன்று 121 கோடியே, 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் வாழ்வதாக கணிக்கப்பட்டுள்ளோம். இந்த மாபெரும் கத்தோலிக்கக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இந்த ஆராதனையில் கலந்துகொள்ள இயலாது என்பது தெரியும். நம்மில் பாதிபேர், அல்லது மூன்றில் ஒரு பகுதியினர், ஏன்? பத்தில் ஒரு பகுதியினர் இந்த ஆராதனையில் ஈடுபட்டாலும், உலகில் 40 கோடி மக்கள், அல்லது 12 கோடி மக்கள் ஒரே நேரத்தில் திரு நற்கருணையில் வாழும் இறைமகன் முன்னிலையில் செபங்களை எழுப்பவிருக்கிறோம். இது உண்மையிலேயே, திருஅவை வரலாற்றில், ஏன்? உலக வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்படும் ஓர் அற்புத முயற்சி. இந்தக் கண்ணோட்டத்தில்தான் இதை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கொண்டாடுகிறோம்.
வரலாறு படைக்கிறோம் என்ற மமதையான எண்ணங்களுடன் இறைவனின் சந்நிதியில் நாம் கூடினால், நமது ஆராதனை முயற்சி வறட்டுப் பெருமையாக மாறிவிடும். அதற்கு மாறாக, இறையன்பை இவ்வுலக மக்கள் இன்னும் அதிகம் உணரவேண்டும் என்ற ஆவலுடன் இந்த உலகை இறைவனிடம் நாம் ஏந்திச் சென்றால், இந்தப் பெருவிழாவின், இந்த வரலாற்று முயற்சியின் உண்மைப் பொருளை நாம் புரிந்துகொள்வோம்.

பல நாட்டின் மனிதர்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மனித வரலாற்றில் பல முறை நடந்துள்ளன. ஆனால், இந்த முயற்சிகள் பெரும்பாலும் தொடர்பு சாதனங்கள் வழியே நிகழ்ந்து வந்துள்ளன. மனிதர்கள் முதன்முதல் நிலவில் காலடி எடுத்துவைத்தபோது, உலகின் பெரும்பான்மை மக்கள் அந்நிகழ்வை வானொலி வழியே ஆவலாய் கேட்டுக் கொண்டிருந்தனர். உலகில் நிகழும் பல விளையாட்டுக்கள், சிறப்பாக, ஒலிம்பிக் விளையாட்டுக்கள், உலகக் கால்பந்து கோப்பை, உலகக் கிரிக்கெட் கோப்பை என்ற பல விளையாட்டுக்கள், நேரடி ஒளிபரப்பின் மூலம் பல நாட்டினரை இணைக்கின்றன. இவை அனைத்துமே பொழுதுபோக்கு என்ற அம்சத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சி என்று கூறலாம்.
பொழுதுபோக்குடன் சில உயரிய கருத்துக்களுக்காகவும் உலகினர் இணைந்துள்ள நிகழ்வுகள் மனித வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, 1980களில், ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவில், ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய பட்டினியை ஒழிக்க, இசைக் கலைஞர்கள் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பு பல கோடி மக்களை இணைத்தது. பொழுபோக்கு என்ற கேளிக்கை வட்டத்தைத் தாண்டி, தான், தனது என்ற சுயநல உலகத்தையும் தாண்டி, அடுத்தவரை மையப்படுத்திய நிகழ்ச்சிகள் இவை.

தொடர்பு சாதனங்கள் வழியே மக்களை அடைந்த இந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பு வெறும் பார்வையாளர்கள் என்ற முறையிலேயே அமைந்தது. இந்த ஞாயிறு அகில உலக கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளும் ஆராதனையில் நாம் பார்வையாளர்கள் அல்ல, மாறாக, பொருளுள்ள வகையில் பங்கேற்கும் பக்தர்கள். நாம் பங்கேற்கும் உலகளாவிய ஆராதனை, தான், தனது என்ற உலகைத் தாண்டி, அடுத்தவரையும், ஆண்டவனையும் மையப்படுத்தும் முயற்சி. உலகில் இயற்கையும், மனிதர்களும் விளைவிக்கும் இடர்களைப் பற்றிய நடைமுறை உண்மைகளை மனதில் ஏந்தி நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி.
இறைவனின் சந்நிதியில், திருநற்கருணை ஆண்டவருக்கு முன், உலகத் துன்பங்களைப் புறந்தள்ளிவிட்டு, இறைவனோடு மட்டும் நாம் ஒரு மணிநேரம் செலவிடப் போகிறோம் என்ற எண்ணத்தைப் போக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த ஆராதனை நேரத்திற்கு இரு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். உலகெங்கும் பரவியுள்ள அனைத்து கத்தோலிக்கர்களும் இணைந்து, காயப்பட்டுக் கிடக்கும் இவ்வுலகை இறைவனுக்கு முன் ஏந்திச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் இந்த ஆராதனைக்கென இரு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தையின் முதல் கருத்து:
"உலகெங்கும் பரவியுள்ள திருஅவை, மிகப் புனிதமான நற்கருணையை வழிபடுவதில் ஒன்றாக இணைந்துள்ளது. இறைவார்த்தைக்கு இன்னும் அதிகமாகக் கீழ்படிவதால், அன்னையாம் திருஅவையை, இன்னும் அழகுள்ள, கறைகளற்ற, புனிதத் தாயாக இவ்வுலகின் கண்களுக்கு இறைவன் காட்டுவாராக. துன்பத்தால் நிறைந்திருக்கும் இவ்வுலகில், இறைவனின் கருணையையும், அன்பையும் ஏந்திச் செல்லும் கருவியாக திருஅவையை இறைவன் மாற்றுவாராக. இவ்வகையில், இவ்வுலகத் துன்பங்களுக்கு உகந்த பதிலாக, அமைதியையும், ஆனந்தத்தையும் தாய் திருஅவை கொணர்வாராக" என்பது திருத்தந்தையின் முதல் கருத்து.

திருத்தந்தையின் இரண்டாம் கருத்து:
அடிமைத்தொழில், மனித வர்த்தகம், போதைப் பொருள் வர்த்தகம் ஆகியவற்றாலும், போரினாலும் துன்புறம் மக்களுக்காக...
பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக, குழந்தைகளுக்காக...
விழிப்பாயிருக்கும் திருஅவையின் செவிகளை இவர்களது மௌன அலறல்கள் சென்றடைவதாக. சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைக் காணும் திருஅவை, வன்முறைகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் இவர்களை மறவாதிருப்பதாக.
பொருளாதார நெருக்கடி மற்றும், வேலைவாய்ப்பின்மையால் துன்புறுவோருக்காக...
வயது முதிர்ந்தோர், வீட்டையும், நாட்டையும் இழந்தோர், சிறையிலிருப்போர் ஆகிய அனைவருக்காக....
நற்கருணை நாதருக்கு முன், தாய் திருஅவை எழுப்பும் இந்த இணைந்த செபம், இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை தருவதாக. மனித மாண்பை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் துணைபுரிவதாக.
இஞ்ஞாயிறன்று உலகெங்கும் பல கோடி கத்தோலிக்கர்கள் ஒரே நேரத்தில் திருநற்கருணை ஆராதனையில் ஈடுபட்டு, காயப்பட்டிருக்கும் உலகம் குணமடைய செபங்களை எழுப்புவர் என்பது ஓர் உன்னதமான உணர்வைத் தருகிறது.

தான் அடைந்த காயங்களால், இவ்வுலகின் காயங்களை குணமாக்க வந்த இறைமகனின் அன்பை வெளிப்படுத்தும் ஓர் அற்புத விழா இயேசுவின் திருஉடல், திருஇரத்த திருவிழா. கேள்விகள் கேட்காமல் அன்பைச் சுவைக்க அழைப்பு விடுக்கும் இந்த விழாவின் மையமான மறையுண்மையைக் குறித்தும் பல நூற்றாண்டுகளாக, பல இறையியல் அறிஞர்கள் கேள்விகள் எழுப்பியுள்ளனர். அவர்கள் எழுப்பிய முக்கியமான கேள்வி: எப்படி அப்பத்தின், இரசத்தின் வடிவில் இயேசு பிரசன்னம் ஆகமுடியும் என்ற கேள்வி. இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்ற இறையியல் விளக்கங்களைக் காட்டிலும், ஏன் நம் இறைமகன் இயேசு அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.
ஏன் இறைமகன் அப்ப, இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச் சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவு. எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலின் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடும். உணவுக்குள்ள இந்த அடிப்படை குணங்களெல்லாம் இறைவனுக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட இயேசு இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார் என்று நினைக்கிறேன். எளிய உணவாக, நாம் தினமும் உண்ணும் உணவாக, நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவாக இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இந்த அன்புப் பரிசைக் கொண்டாடும் திருநாளே, இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா.

இணைபிரியாமல் நம்முடன் தங்கியிருக்கும் இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் என்ற மறைபொருளை உறுதி செய்யும் வகையில் பல புதுமைகள் மனித வரலாற்றில் நடந்துள்ளன. இன்றும் தொடர்கின்றன. தங்களுடன் இறைமகன் இயேசு இருக்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால் எத்தனையோ வீர உள்ளங்கள் தங்கள் உயிரையும் இழக்க தயாராக இருந்தார்கள். இந்த வீர உள்ளங்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள வாழ்வு அனுபவங்களுடன் நம் சிந்தனைகளை நாம் இன்று நிறைவு செய்வோம்:

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை குருக்களில் புனித Isaac Joguesம் ஒருவர். பழங்குடி மக்களிடையே அவர் தொடர்ந்து அனுபவித்துவந்த சித்ரவதைகளால் தன் கை விரல்களையெல்லாம் இழந்திருந்தார். இந்த நிலையில் அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு திருப்பலி நிகழ்த்த விரும்பினார். கைவிரல்கள் இல்லாததால், அவர் திருப்பலி செய்வதற்கு திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பானிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இக்குரு திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். விரல்கள் இல்லாதபோதும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் தன் விரல்களற்ற கைகளில் Isaac Jogues உயர்த்திப் பிடித்தது கட்டாயம் பலருக்கு இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

போலந்து நாட்டில் பிறந்து, அமெரிக்காவுக்குக் குடியேறிய ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் Walter Ciszek. இவரது குழந்தைப் பருவம் மிகக் கடினமானச் சூழலில் கடந்தது. இவர் இளவயதை எட்டியபோது, வன்முறை கும்பல் (Gang) ஒன்றில் இணைந்தார். தான் ஒரு குருவாகப் போவதாக Walter ஒருநாள் கூறியபோது, பெற்றோர் உட்பட அனைவரும் திகைத்தனர். இயேசு சபையில் சேர்ந்த Walter, இரஷ்யாவில் மறைப்பணி செய்யப் புறப்பட்டார்.
1941ம் ஆண்டு, வத்திக்கான் உளவாளி என்ற குற்றத்தின்பேரில் இரஷ்ய அரசு இவரைச் சிறையில் அடைத்தது. 23 ஆண்டுகள் மிகக் கடினமான துன்பங்களை இவர் அனுபவித்தார். துன்பம் நிறைந்த அச்சூழல்களில் அவருக்கு உறுதி தந்தது, அவர் ஆற்றியத் திருப்பலிகள் என்று அவர் பின்னர் குறிப்பிட்டார். அந்நாட்களில் நற்கருணை உட்கொள்வதற்கு முன் வேறு எதையும் உண்ணக்கூடாது என்ற விதிமுறை இருந்ததால், இவர் திருப்பலி ஆற்றும் நாட்களில், இவரும், ஏனைய கைதிகளும் காலையிலிருந்து ஒன்றும் உண்ணாமல் தங்கள் கடினமான பணிகளைச் செய்தனர். பின்னர், அதிகாரிகளுக்குத் தெரியாமல் அச்சிறையில் திருப்பலிகள் நிகழ்ந்தன.
இத்திருப்பலிகளைப் பற்றி Walter பின்னர் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்: "நாங்கள் உடுத்தியிருந்த கைதிகளின் உடை, எங்கள் கைக்குட்டை, எங்களுக்குத் தரப்பட்ட தகரக் குவளை, எங்களுக்குக் கிடைத்த சில ரொட்டித் துண்டுகள், சில துளிகள் இரசம் இவைகளைக் கொண்டு நாங்கள் திருப்பலியாற்றினோம். கடவுள் நம்பிக்கை ஏதுமில்லாத அந்த நாட்டில், நாங்கள் ஆற்றிய இத்திருப்பலிகள் வழியாக, நல்லாயனாம் கிறிஸ்து, வழிதவறிச் சென்ற ஆடுகளாகிய எங்களைத் தேடிவந்து, தன் உடலையும் இரத்தத்தையும் தந்தார். அச்சிறையில், இறைமகனின் உண்மையான பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்தோம். இறைவனை இவ்வுலகில் தொடர்ந்து தங்கவைக்க இன்னும் எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும் சந்திக்க நான் தயார்" என்று Walter குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதம், கோடான கோடி மக்களின் மனங்களில் இத்தனை நூறு ஆண்டுகளாய் வீரத்தை, தியாகத்தை, அனைத்திற்கும் மேலாக, அன்பை வளர்த்துள்ள கிறிஸ்துவின் பிரசன்னம் என்ற மறையுண்மைக்கு முன், உலகளாவிய கத்தோலிக்கக் குடும்பத்துடன் இணைந்து, தாழ்ந்து, பணிந்து வணங்குவோம். இறைமகன் இயேசு, தன் திருஉடல் திருஇரத்தத்தின் வழியாக விட்டுச் சென்றுள்ள அன்பையும், தியாகத்தையும் நமது அன்றாட வாழ்வாக்க முனைவோம்.








All the contents on this site are copyrighted ©.