2013-06-01 16:49:28

அன்னைமரியாவின் ஆன்மீக மனப்பான்மையைத் தியானித்து அவ்வன்னையின் மாதத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,01,2013. அன்னைமரியாவைப் போன்று நாமும், உற்றுக்கேட்டல், தீர்மானித்தல், செயல்படுதல் ஆகிய பண்புகளில் வளர்வோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தை நிறைவு செய்யும் விதமாக, இவ்வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற செபமாலை பக்திமுயற்சியில் கலந்து கொண்டு அன்னைமரியா குறித்த சிந்தனைகளை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எரியும் மெழுகுதிரிகளை ஏந்தியவண்ணம் இச்செபமாலை பக்திமுயற்சியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம், ஆண்டவர் தினமும் பல வழிகளில் நம் கதவருகில் வந்து அதனைத் தட்டுகிறார், எனவே நம் அன்றாட நிகழ்வுகளுக்கும், நாம் சந்திக்கும் மக்களுக்கும், நம் வாழ்வின் நிஜங்களுக்கும் நாம் செவிமடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித திருமுழுக்கு யோவானைக் கருத்தாங்கியிருந்த தனது உறவினர் எலிசபெத்தை மரியா சந்தித்த நிகழ்வு குறித்து விளக்கிய திருத்தந்தை, அன்னைமரியாவின் மனப்பாங்கை, உற்றுக்கேட்டல், தீர்மானித்தல், செயல்படுதல் ஆகிய மூன்று பண்புகளில் உள்ளடக்கிச் சொல்லலாம் என்று கூறினார்.
இச்சிந்தனைகளின் இறுதியில் எழுந்து நின்று, தான் அமர்ந்திருந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த அன்னைமரியா திருவுருவத்தின் பக்கம் திரும்பி கிறிஸ்தவ சமூகத்தை அத்தாயிடம் அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது காதுகள் திறக்கப்படட்டும், நமது மனங்களும் இதயங்களும் புத்துயிர் பெறட்டும், நமது கரங்களும் கால்களும் உறுதியாகி, பிறரன்புப் பணி செய்ய உறுதி பெறட்டும் எனச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.