2013-05-31 16:08:35

திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மைப் பேணி வளர்த்துவரும் திருநற்கருணை நம் வாழ்வை மாற்ற வேண்டும்


மே,31,2013. தம்மையே உணவாக அளிக்கும் திருநற்கருணையில் இயேசு, கத்தோலிக்கருக்கு, அவர்களின் வாழ்வுப் பாதை கடினமாக இருக்கும்போதும்கூட அவர்களுக்கு ஊட்டமளித்துப் பேணிக்காத்து வருகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் மாலை புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில் இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழாத் திருப்பலி நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, கத்தோலிக்கர் திருப்பலியிலும், திருநற்கருணை பவனியிலும் பங்குகொள்ளும் நேரங்கள், அவர்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பது குறித்து சிந்திப்பதற்கான நேரங்களாக உள்ளன என்று கூறினார்.
இயசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமை நிகழ்வை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, சீடத்துவம், தோழமை, பகிர்வு ஆகிய முக்கிய சொற்களை இந்நற்செய்திப் பகுதி நமக்கு நினைவுறுத்துகின்றது என்றும் கூறினார்.
திருநற்கருணை திருப்பந்தி, நம் ஆண்டவரோடும், இதே திருப்பந்தியில் கலந்து கொள்ளும் பிற சகோதர சகோதரிகளுடனும் உண்மையான ஒன்றிப்புணர்வு கொள்ளும் நேரமாக இருக்கின்றதா? என்றும், திருநற்கருணையில் உண்மையாகவே பிரசன்னமாக இருக்கும் கிறிஸ்துவை ஆராதிக்கும்பொழுது நாம் அவரால் மாற்றமடைய நம்மைக் கையளிக்கிறோமா? என்றும் விசுவாசிகளிடம் கேள்வி எழுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு திருநற்கருணைப் பேருண்மையில் மௌனத்தில் நம்மிடம் பேசுகிறார், அவரைப் பின்செல்வது என்பது நம்மை அவருக்கும் மற்றவருக்கும் கொடையாக வழங்குவதாகும் என்பதை ஒவ்வொரு நேரமும் அவர் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.
புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவிலிருந்து புனித மேரி மேஜர் பசிலிக்காவரை இடம்பெற்ற திருநற்கருணை பவனியில், திருநற்கருணை கதிர்ப்பாத்திரம், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வர, அதற்கு முன்னர் நடந்து சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பவனியில் இருபது ஆயிரத்துக்கு அதிகமான விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.