2013-05-31 16:04:40

திருத்தந்தை பிரான்சிஸ் : சோகமான, ஊக்கமிழந்த முகங்கள் நற்செய்தியை அறிவிக்க முடியாது


மே,31,2013. கிறிஸ்தவ மகிழ்ச்சியின் படைப்பாளர் தூய ஆவியார், இந்த ஆவியார் நம் இதயங்களில் கொடையாக வழங்கும் மகிழ்ச்சி, நாம் நற்செய்தியை அறிவிப்பதற்கு அவசியம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளைப் புகழ்வதற்குச் செல்கின்றனர் என்பதைவிட அடக்கச்சடங்கில் கலந்து கொள்ளச் செல்கின்றனர் என்பதுபோல் கிறிஸ்தவர்கள் அடிக்கடி தோற்றமளிக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், சோகத்துடன் காணப்படும் முகங்களால் நற்செய்தியை அறிவிக்க முடியாது என்று கூறினார்.
“அகமகிழ், மகிழ்ச்சியால் ஆர்ப்பரி, ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்” என்றுரைக்கும் செப்பனியா இறைவாக்கினர் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, கருவுற்றிருந்த எலிசபெத்தை அன்னைமரியா வாழ்த்தியபோது, எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது, இந்நிகழ்வும் மகிழ்ச்சி பற்றியே விவரிக்கின்றது என்றும் கூறினார்.
இந்த மகிழ்ச்சியை தூய ஆவியார் நமக்குக் கொடுக்கிறார், இம்மகிழ்ச்சி உண்மையான கிறிஸ்தவச் சுதந்திரத்தை நமக்கு வழங்குகின்றது என்றும் கூறிய திருத்தந்தை, திருப்பலியில் கலந்து கொள்ளும் நீங்கள் கடவுளைப் புகழ்கின்றீர்களா? அல்லது அவரிடம் விண்ணப்பங்களை முன்வைத்து அவருக்கு நன்றி கூறுகின்றீர்களா? என்றும் அதில் கலந்து கொண்ட விசுவாசிகளிடம் கேட்டார்.
இயேசுவை நம்மிடம் கொணர்ந்து, மகிழ்ச்சியின் அருளையும் சுதந்திரத்தின் அருளையும் நமக்கு அருளுமாறு அன்னைமரியிடம் செபிப்போம் என்றும் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.