2013-05-31 16:18:42

ஜூன் 01, 2013. கற்றனைத்தூறும்...... வெளவால்


வெளவாலை பறவை என்று கூறுவதை விட பறக்கக் கூடிய ஒரு விலங்கு என்று கூறலாம். இது ஏனைய விலங்குகளைப் போன்று குட்டி போட்டு பாலூட்டும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றது. இதன் முகம் கூட பறவைகளிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படும். காதுகள் நீண்டதாகவும், கூர்மையான பற்களைக் கொண்டதாகவும் இருக்கும். ஆனால் பறவையினங்கள் பாலூட்டும் தன்மைகொண்டனவோ, பற்களைக்கொண்டனவோ அல்ல என்பதை நாம் அறிவோம். உயிரினங்களின் புதைப் படிவங்களை ஆராய்ந்த அறிவியலாளர்களின் கூற்றுப்படி, பூமியில் 6 கோடி வருடங்களுக்கு முன்னிருந்தே வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன என்று கூறுகின்றனர்.
வெளவால்கள் (இரவில்) பறக்கும்போது ஒரு வகைக் கீச்சுக்குரலை எழுப்பும். இதன் மூலம் அவை தமக்கு முன்னால் ஏதும் தடைகள் இருக்கின்றனவா என்பதை உணர்ந்து தமது பாதையை இனங்கண்டு அறிந்துகொண்டு பறக்கின்றன. வெளவால் இனத்திற்கு பறப்பதற்கு கண் முக்கியமில்லை. கீச்சிடுவதற்கு வாயும் அதன் மூலம் ஏற்படும் எதிரொலியைக் கேட்பதற்குக் காதும் இருந்தால் மட்டுமே போதும் அவற்றால் இலகுவாகப் பறக்க முடியும்.
பெரும்பாலும் வெளவால்கள் பூக்கள், பழங்கள், புழுக்கள், பூச்சிகளையே உண்டு வாழ்கின்றன. புழு, பூச்சிகளையும் ஏனைய உணவுகளையும் பார்க்கவே கண்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் பற்கள் ஊசி போன்று கூர்மையானவை. இரத்தம் குடித்து வாழும் வெளவால்களும் உண்டு. வெளவால்கள் பறக்கும் போது முறையாகப் பறந்தாலும், ஓய்வின்போது தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தமது சிறகுகளினால் முகத்தை மூடியபடி இருக்கும்.

ஆதாரம் சித்தார்கோட்டை








All the contents on this site are copyrighted ©.