2013-05-31 16:16:43

சிகரெட் விளம்பரங்கள் தடைசெய்யப்படுமாறு ஐ.நா. அழைப்பு


மே,31,2013. புகையிலைப் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பரங்கள் மற்றும் புகையிலை வியாபாரத்தைத் தடைசெய்வது, புகையிலையைப் பயன்படுத்துவோர் மற்றும் புகையிலை தொடர்புடைய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று WHO என்ற உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் மருத்துவர் Margaret Chan கூறினார்.
மே,31, இவ்வெள்ளிக்கிழமையன்று அனைத்துலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள மருத்துவர் Chan, புகையிலை வியாபாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் உட்பட புகையிலை தொடர்புடைய அனைத்து விளம்பரங்களும் தடைசெய்யப்படுமாறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2003ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட உலக அளவில் புகையிலையைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் 176 நாடுகள், அதாவது உலகின் 88 விழுக்காட்டு மக்களைக் கொண்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆயினும் 19 நாடுகளே, அதாவது உலகின் 6 விழுக்காட்டு மக்களைக் கொண்ட நாடுகளே புகையிலை தொடர்புடைய விளம்பரங்கள் அனைத்தையும் முழுவதுமாகத் தடைசெய்துள்ளன என்று WHO நிறுவனம் கூறியுள்ளது.
"அனைத்துவிதமான புகையிலை விளம்பரங்களையும், அவற்றுக்கு நிதி உதவி செய்வதையும் தடைசெய்தல்' என்பது இவ்வாண்டு இத்தினத்தின் மையக் கருத்து.
உலகின் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் உட்பட்ட பருவத்தினரில் 70 விழுக்காட்டினர் புகையிலை விளம்பரங்கள் மற்றும் புகையிலை வியாபாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சிகரெட்டில் நான்காயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.

ஆதாராம் : UN







All the contents on this site are copyrighted ©.