2013-05-30 12:58:47

மே,31,2013 கற்றனைத்தூறும்... அடிமைத்தனம்


அடிமைத்தனம் என்பது மனிதர்களைச் சொத்துக்களாகக் கணித்து அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் வந்த ஓர் அமைப்பு முறையாகும். இந்நிலைக்கு உள்ளாகும் இந்த அடிமை மனிதர்கள் அதாவது அடிமைகள் எவ்வித அடிப்படை உரிமைகளையும் பெற முடியாத நிலையில் வைக்கப்பட்டனர். வரலாற்றைப் பார்க்கும்போது இது பல சமூகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புமுறையாகவே இருந்து வந்துள்ளது. இது அண்மைக் காலங்களில் பல சமூகங்களில் ஒழிக்கப்பட்டிருந்தாலும், கொத்தடிமை, கட்டாயத் திருமணம், சிறார் படைவீரர், கட்டாயப் பாலியல் தொழில், மனித வணிகம் போன்றவைகளாக இன்றும் அடிமைத்தனங்கள் நடைமுறையில் உள்ளன. உலகில் ஒவ்வொரு நாட்டிலும் அடிமைத்தனம் சட்டத்துக்குப் புறம்பானது எனினும், இன்னும் உலகில் ஏறக்குறைய 2 கோடியே 70 இலட்சம் அடிமைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் தெற்கு ஆசியாவில் வாங்கிய கடனுக்காக அடிமைகளாக வேலை செய்பவர்கள். 2042ம் ஆண்டுக்குள் இந்த அடிமைத்தனம் ஒழிக்கப்படும் எனச் சில சமூக ஆர்வலர்கள் நம்புகின்றனர். அடிமைத்தனம் தொன்மைக் காலங்களில் இனங்களிடையே போரினால் ஏற்பட்டது. போரில் தோல்வியுற்ற வீரர்களும், அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகள் பெரிய இராணுவ, கட்டிட, பண்ணை, அரண்மனை போன்ற இடங்களிலும், பிரபுக்கள் வீடுகளிலும் வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டனர். சனநாயகத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஏதென்ஸில் 21,000 சுதந்திர மனிதர்களும், 4,00,000 அடிமைகளும் இருந்தனர் எனச் சொல்லப்படுகிறது.
அடிமைத்தனம் கி.மு.1760ல், மெசபடோமியாவின் 'ஹம்முராபியின் நீதி'களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சமூக வழக்காக இருந்துள்ளது. எகிப்தியர் போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தினர். அடிமைகள் முதலில் அரசர் பாரவோனுக்குத்தான் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்க்கு அடிமைகளைப் பரிசளிக்கலாம். தாதுச்சுரங்கங்களிலும், உயிருக்கு ஆபத்து நிறைந்த வேலைகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பழங்காலத்தில் ஓர் அடிமையின் விலை, அந்த அடிமையின் உருவம், வயது, உடல்வலிமை, ஆகியவற்றைப் பொருத்திருந்தது. பணக்கார கிரேக்க குடும்பங்கள் 20 அடிமைகளைக்கூட வைத்திருந்தனர். கிரேக்க அடிமைகள் தாங்களே தங்கள் பெயர்களை வைத்துக்கொள்ள கூடாது.

ஆதாரம் : விக்கிப்பீடியா








All the contents on this site are copyrighted ©.