2013-05-30 16:23:00

ஐ.நா.அமைப்பின் பெயரால், அமைதி காக்கும் பணியில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி


மே,30,2013. அமைதியைப் பாதுகாக்கும் பணிகள் இவ்வுலகில் கடினமாகி வருகிறது என்றும், இருந்தாலும் ஐ.நா. அமைப்பு, இப்பணியை இன்னும் ஆழமான ஈடுபாட்டுடன் மேற்கொள்ளும் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஐ.நா.அமைப்பின் பெயரால், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டு, தங்கள் உயிரை இழந்துள்ள வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் மே மாதம் 29ம் தேதி. இந்த நாளையொட்டி, ஐ.நா. அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் இப்புதனன்று நியூயார்க் நகரில் நடைபெற்றது.
இந்த அஞ்சலியின்போது உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், அண்மைக்காலங்களில் வன்முறைக்கு மட்டும் ஐ.நா. வீரர்கள் பலியாகவில்லை, மாறாக, போர்க் களங்களில் உருவாகும் நோய்களாலும் வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று கூறினார்.
வீரர்களின் உயிரிழப்பு இருந்தாலும், நீலநிற உடையில் பணியாற்றும் வீரர்கள் மக்கள் மத்தியில் கொணரும் நம்பிக்கை நிறைவைத் தரும் ஓர் எண்ணம் என்று பான் கி மூன் கூறினார்.
65 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றிய வீரர்களில் இதுவரை 3000க்கும் அதிகமானோர் அமைதி காக்கும் பணியில் இறந்துள்ளனர் என்றும், 2012ம் ஆண்டு மட்டும் இப்பணியில் இறந்த ஐ.நா. வீரர்களின் எண்ணிக்கை 111 என்றும் ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆதாரம் – UN








All the contents on this site are copyrighted ©.