2013-05-29 16:50:11

மனித உயிர்களைப் பறிக்கும் அனைவரும், இறைவன் முன் நிற்க வேண்டிவரும் - கர்தினால் Maradiaga


மே,29,2013. இறைவனை நம்பும் மக்களைக் கொண்ட நாடு Honduras எனில், இறை வார்த்தையின் படி நாம் வாழவேண்டும் என்று அழைப்பு விடுத்தார், Tegucigalpa பேராயர் கர்தினால் Óscar Andrés Rodríguez Maradiaga.
இவ்வாண்டு நவம்பர் மாதம் Honduras நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்றச் சூழலில், அந்நாட்டில் பெருகி வரும் வன்முறைகள், தேர்தல் நேரத்தில் இன்னும் அதிகமாகும் என்ற பின்னணியில் கர்தினால் Maradiaga இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியது.
Honduras நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 பேர் கொலை செய்யப்படுவதாகவும், 2012ம் ஆண்டு அந்நாட்டில் 10,441 பேர் கொலையுண்டனர் என்றும் வத்திக்கான் நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
பணத்திற்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் மனித உயிர்களைப் பறிக்கும் அனைவரும், இறைவன் முன் நிற்க வேண்டிவரும் என்று கர்தினால் Maradiaga வலியுறுத்திக் கூறினார்.
நமக்குள் பல வேறுபாடான கருத்துக்கள் நிலவினாலும், நாட்டை வளமான பாதையில் நடத்திச் செல்ல வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்காது என்றும், எனவே நாட்டை இன்னும் கீழ்நோக்கி அழைத்துச் செல்லும் கொலை முயற்சிகளை அனைத்து வன்முறையாளர்களும் கைவிட வேண்டுமென்றும் கர்தினால் Maradiaga வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.