2013-05-29 16:23:05

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 29, 2013. உரோம் நகரில் கோடைகாலம் துவங்கி விட்டாலும், அவ்வப்போது மழையும் பெய்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் கடுமையான கோடையின் காரணமாக பள்ளிகள் ஒருவாரம் கடந்தே திறக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளவேளையில், உரோம் நகரோ வழக்கத்திற்கு மாறாக, கோடையிலும் மிதமான குளிரை அனுபவித்து வருகிறது. இப்புதன் காலையிலும் வானம் இலேசாக தூறிக்கொண்டிருக்க, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் குடைகளைத் தாங்கியவர்களாக திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். அந்த மழைத்தூறலின் நடுவிலும் மக்களின் இடையே வலம் வந்த திருத்தந்தை, மழையில் நனைந்துகொண்டே மக்களை ஆசீர்வதித்துச் சென்றார். திருத்தந்தையின் மறையுரைக்கு மக்கள் இடையூறு ஏதுமின்றி செவிமடுக்க வேண்டும் என விரும்பிய மழையும், ஒரு சில நிமிடங்களில் நின்றுவிட, 'திருஅவை இறைவனின் குடும்பம்' என்ற தலைப்பில் தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்புச் சகோதர சகோதரிகளே, இன்றைய மறைபோதகத்தின்போது நான், திருஅவை இறைவனின் குடும்பம் என்பது குறித்து என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவல்கொள்கின்றேன். 'காணாமற்போன மகன்' உவமையில் வரும் கருணைநிறை தந்தையைப்போல், இறைவன் நாம் அனைவரும் அவரின் அன்பில் வாழவேண்டும் மற்றும் அவரின் வாழ்வில் பங்குகொள்ளவேண்டும் என விரும்புகிறார். இந்த இறைத்திட்டத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது திருஅவை. நாம் அவரை அறிந்து அன்புகூர அழைக்கப்பட்டிருக்கிறோம். அதேவேளை, நாம் பாவங்களில் உழன்றாலும், நாம் அவரிடம் திரும்பிச் செல்லவேண்டும் என இறைவன் நம்மை அழைக்கிறார். காலம் நிறைவுற்றபோது, தம் மகனை இவ்வுலகிற்கு அனுப்பி, சிலுவையில் அவர் மேற்கொண்ட தியாகப்பலி மூலம் மனிதகுலத்தோடு புதிய, நிலையான உடன்படிக்கையை துவக்கிவைத்தார் இறைவன். கிறிஸ்துவின் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்ட காயத்திலிருந்து ஒப்புரவு அன்பெனும் உன்னத செயற்பாடாக வழிந்தோடிய இரத்தம் மற்றும் நீரில் திருஅவை பிறந்தது. தூயஆவியார்பெருவிழா நாளன்று தூய ஆவியானவர், இறைவனின் அன்பெனும் நற்செய்தியை உலகின் இறுதி எல்லை வரைச்சென்று அறிவிக்கும்படி திருத்தூதர்களை அனுப்பினார். இறைவனின் குழந்தைகளின் குடும்பமாக இயேசுவே உருவாக்கியுள்ள திருஅவையிலிருந்து அவரை ஒருநாளும் பிரிக்க முடியாது. திருஅவை மீதான நம் அன்பைப் புதுப்பிக்க இன்று நாம் உறுதியெடுப்போம். இறைவனின் உண்மையான குடும்பமாக திருஅவை செயல்பட உதவுவோம். திருஅவையில் அனைவருமே, வரவேற்கப்படுபவர்களாக, புரிந்துகொள்ளப்பட்டவர்களாக, அன்புகூரப்படுபவர்களாக உணர்கிறார்கள்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வாரப்புதன் பொது மறைபோதகத்தின் மையக்கருத்தை தன் டுவிட்டர் பக்கத்திலும் ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
‘கிறிஸ்துவின் விலாவின் திறந்த பகுதியிலிருந்து, சிலுவையின் அந்த உன்னத அன்புச் செயலிலிருந்து திருஅவை பிறந்தது. நாம் அன்புகூரும் மற்றும் அன்புகூரப்படும் குடும்பமே திருஅவை’, இதுவே திருத்தந்தையின் இப்புதன் டுவிட்டர் செய்தியாக இருந்தது.







All the contents on this site are copyrighted ©.