2013-05-29 16:48:05

குடி நீர் ஒரு வர்த்தகப் பொருள் அல்ல, அது அனைத்து மனிதரின் அடிப்படை உரிமை - பேராயர் சுள்ளிக்காட்


மே,29,2013. குடி நீர் என்பது ஒரு வர்த்தகப் பொருள் அல்ல, மாறாக, அது அனைத்து மனிதருக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் அடிப்படை தேவை, எனவே அடிப்படை உரிமை என்பதை இவ்வுலகம் உணரவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"நீரும், சுற்றுச்சூழலின் தூய்மையும்" என்ற தலைப்பில் ஐ.நா. அவையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் ஐ.நா. பொது அவையில் நிரந்தரப் பார்வையாளராக பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் இவ்வாறு உரையாற்றினார்.
உலகில் 80 கோடிக்கும் அதிகமானோர் நீர் ஆதாரம் ஏதுமின்றி வாழ்கின்றனர் என்றும், இன்னும் பல கோடி பேருக்கு பாதுகாப்பான, சுத்தமான நீர் கிடைப்பதில்லை என்றும் கூறிய பேராயர் சுள்ளிக்காட், இத்தகைய நிலையை மாற்றி அமைப்பது உலக அரசுகளின் அவரசத் தேவை என்றும் எடுத்துரைத்தார்.
மில்லென்னிய இலக்குகள் என்று எண்ணிப் பார்க்கும்போது, சுற்றுச்சூழல் தூய்மை என்பது பல கோடி மக்களுக்கு மிகவும் தூரமாக இருக்கும் ஓர் இலக்காக மாறி வருகிறது என்பதை பேராயர் தன் உரையில் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.
அனைவருக்கும் நீர் கிடைக்க வேண்டும் என்றால், நீர்வளமிக்க நாடுகளில் வாழும் மக்கள், தேவைக்கும் அதிகமாக நீரை வீணாக்கும் பழக்கங்களைக் கட்டுப்படுத்தி, அனைவருக்கும் நீர் வளம் கிடைக்கும்படி செய்வதே உண்மையான நீதி என்றும் பேராயர் சுள்ளிக்காட் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.