2013-05-29 16:47:05

உலகின் அனைத்து நாடுகளின் கத்தோலிக்கர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து மேறகொள்ளும் திரு நற்கருணை ஆராதனை


மே,29,2013. ஜூன் 2ம் தேதி, வருகிற ஞாயிறு மாலை 5 மணியிலிருந்து 6 மணி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, உலகின் அனைத்து நாடுகளில் வாழும் கத்தோலிக்கர்களும் திரு நற்கருணை ஆராதனையில் கலந்துகொள்வர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புது வழிகளில் நற்செய்தி அறிவிப்பு பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella, ஜூன் 2ம் தேதி அன்றும், ஜூன் 15, 16ம் தேதிகளிலும் நடைபெறவிருக்கும் நம்பிக்கை ஆண்டின் இரு முக்கிய நிகழ்வுகளைப்பற்றி இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
வருகிற ஞாயிறன்று மாலை உரோம் நேரம் 5 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திரு நற்கருணை ஆராதனை ஆரம்பமாகும் அதே நேரம் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராதனைகள் ஆரம்பமாகும் என்றும், திருஅவை வரலாற்றில் இத்தகைய முயற்சி இதுவே முதல் முறை என்றும் பேராயர் Fisichella எடுத்துரைத்தார்.
உரோம் நகரில் மாலை 5 மணி என்பது Cook தீவுகள், Samoa மற்றும் Honolulu ஆகிய இடங்களில் காலை 5 மணியாக இருக்கும் என்றும், அவ்விடங்களில் உள்ளவர்கள், மற்றும் நியூசிலாந்து, இந்தியா, வியட்நாம், தென் அமேரிக்கா, வட அமேரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஆகிய பல நாடுகளில் பல்லாயிரம் கோவில்களிலும் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் திருத்தந்தையின் கருத்துக்களுக்காக, அவரோடு இணைந்து திரு நற்கருணை வழிபாட்டில் ஈடுபடுவர் என்று பேராயர் Fisichella விளக்கினார்.
“தாய் திருஅவை இறைவன் தன் குரலுக்கு இன்னும் அதிகம் செவிமடுக்கவும், இன்னும் அதிகமாக தன் கரைகள் கழுவப்பெற்று திருஅவை அழகுடன் மிளிரவும்” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் கருத்து என்று சுட்டிக்காட்டினார் பேராயர் Fisichella.
“பல்வேறு அடிமை விலங்குகளால் துன்புறும் அனைவரும் எழுப்பும் செபங்கள் கேட்கப்படவும், தாய் திருஅவை தன் செபத்தாலும், விடுதலைத் தரும் செயல்களாலும் துன்புறும் மக்களுடன் இணைந்திருக்கவும்” என்பது திருத்தந்தையின் இரண்டாவது கருத்து என்று செய்தியாளர்களிடம் கூறினார் பேராயர் Fisichella.
"நம்பிக்கை கொண்டு, அவர்கள் வாழ்வு பெறுவார்களாக" என்ற கருத்துடன் ஜூன் மாதம் 15, 16 ஆகிய இரு நாட்கள் கொண்டாடப்படும் மற்றொரு விழா, நம்பிக்கை ஆண்டின் மற்றொரு முக்கிய நிகழ்வு என்று கூறிய பேராயர் Fisichella, திரு அவை மனித உயிர் மீது கொண்டிருக்கும் மதிப்பைக் கொண்டாட இவ்விரு நாட்களும் நம்பிக்கை ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ளன என்று விளக்கினார்.
ஜூன் 16ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலை 10.30 மணிக்கு தலைமையேற்று நடத்தும் திருப்பலியும், அவர் வழங்கும் செய்தியும் மனித உயிர்களை திருஅவை எவ்விதம் போற்றுகின்றது என்பதற்கு சான்றாக இருக்கும் என்றும் புது வழிகளில் நற்செய்தி அறிவிப்பு பணி என்ற திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Fisichella செய்தியாளர்களிடம் கூறினா.

ஆதாரம் : VIS / AsiaNews








All the contents on this site are copyrighted ©.