2013-05-29 16:48:54

உலகம் இன்று சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளிலும், தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை பசி - பேராயர் சுள்ளிக்காட்


மே,29,2013. ஒவ்வொரு நாளும் நூறு கோடி மக்கள் பசியோடு உறங்கச்செல்லும் அவலம் இன்று உலகில் நிலவுவதைத் தடுக்க அனைவருமே முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. அவையில் திருப்பீட அவையின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் கூறினார்.
மில்லேன்னிய முன்னேற்ற இலக்குகள் என்ற கருத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட், இன்றைய சமுதாயம் சந்திக்கும் மிகப் பெரும் அவமானம், பசியுடன் உறங்கச் செல்லும் மனிதர்கள் என்று கூறினார்.
உலகம் இன்று சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளிலும் தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை பசி என்றும், இதனைத் தீர்க்க, பெரும் தொழில் நுட்பங்களோ வேறு வழிமுறைகளோ தேவையில்லை, மனிதர்கள் மனது வைத்தாலே இதனைத் தீர்க்கமுடியும் என்பதை பேராயர் தன் உரையில் வலியுறுத்தினார்.
மனிதத் தேவைகளைத் தீர்க்கும் ஓர் உயர்ந்த நோக்குடன் ஐ.நா. அவை உருவாக்கப்பட்டது என்பதை எடுத்துக்கூறிய பேராயர் சுள்ளிக்காட், உலக அரசுகள் மனதுவைத்தால், நூறு கோடி சகோதர சகோதரிகள் பசியோடு உறங்கச் செல்வதை நாளையே தடுத்து நிறுத்தமுடியும் என்ற வேண்டுகோளுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.