2013-05-28 16:14:45

முதுபெரும் தலைவர் Laham : வருங்கால சிரியா அழிவின்மீது கட்டப்பட முடியாது


மே,28,2013. வருங்கால சிரியா அழிவின்மீது கட்டப்பட முடியாது, போரில் வெற்றியாளர்கள் என்று யாரும் கிடையாது, திருஅவை ஒப்புரவு மற்றும் உரையாடலை ஊக்குவிக்கின்றது என்று எருசலேம் மெல்கித்தே வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் Gregory III Laham கூறினார்.
வருகிற ஜூன் 10ம் தேதி ஜெனீவாவில் நடைபெறவிருக்கும், “சிரியாவில் அமைதி” குறித்த கூட்டத்தில் அரசும், எதிர்தரப்பும் அமைதியின் பாதையை நோக்கிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையை தெரிவித்தார் முதுபெரும் தலைவர் Laham.
சிரியாவில் போரிடும் புரட்சிக்குழுக்களுக்கு ஆயுதம் வழங்குவதைத் தடைசெய்யும் நடவடிக்கையைப் புதுப்பிப்பது குறித்த உடன்பாடு ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளுக்குள் இத்திங்கள் இரவு ஏற்படாதது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தலைவர் Laham இவ்வாறு கூறினார்.
புரட்சிக்குழுக்களுக்கு ஆயுதங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தால், சண்டையும் வெறுப்பும் வேதனையும் தொடர்நது வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
சிரியா அரசை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்துவந்த தடையை விலக்கிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் இசைவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.