2013-05-28 16:22:28

பிறவி காது கேளாமைக்கு உறவில் திருமணமே முக்கியக் காரணம்: மருத்துவர் காமேஸ்வரன்


மே,28,2013. குழந்தைகளின் பிறவி காது கேளாமை பிரச்சனைக்கு உறவில் திருமணம் செய்வதே முக்கியக் காரணம் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், காது-மூக்கு-தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணருமான மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 50 ஆயிரம் குழந்தைகளின் செவித்திறனை சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது.
தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில், 6 குழந்தைகளுக்கு அதாவது 0.6 விழுக்காட்டுக் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளது, இது தேசிய சராசரியைக் (0.2விழுக்காடு) காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அனைத்துலக அளவில் ஒப்பிடும்போது இது ஆறு மடங்கு அதிகம் என்றும் காமேஸ்வரன் கூறினார்.
இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக இத்திங்கள்கிழமையன்று மருத்துவர் காமேஸ்வரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் மிக அதிகமான குழந்தைகளிடம் செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்று கூறினார்.
காது கேளாமைப் பாதிப்புள்ள குழந்தைகளில் 66 விழுக்காட்டுக் குழந்தைகளின் பாதிப்புக்கு உறவில் செய்யப்படும் திருமணமே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேறுகாலத் தொற்று நோய், எடைக் குறைவான குழந்தை, குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக குழந்தைக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் உறவில் திருமணமே முக்கியக் காரணியாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமணி







All the contents on this site are copyrighted ©.