2013-05-28 16:18:23

தாய்லாந்து ஆயர் தொழிற்சாலைகளால் காடுகள் அழிக்கப்படுவதற்குக் கண்டனம்


மே,28,2013. விறகுக்காகவும், கரும்புப் பயிரிடுவதற்காகவும் தாய்லாந்தில் காடுகள் அழிக்கப்படுவது அதிகரித்து, காடுகளின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அந்நாட்டு ஆயர் ஒருவர் கண்டனம் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான விறகுக்காகவும், கரும்புப் பயிரிடுவதற்காகவும் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 4,000 மரங்கள் வீதம் அழிக்கப்படுகின்றன என்றும் கூறினார் தாய்லாந்து ஆயர் பேரவையின் சுற்றுச்சூழல் ஆணையத் தலைவர் Tharae-Nongsaeng பேராயர் Chamniern Santisukniran.
இளையோர் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மூன்றுநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்த பேராயர் Santisukniran, காடுகள் அழிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து எடுத்துச் சொன்னார்.
1973ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வியட்நாமும் தாய்லாந்தும் அந்நாடுகளின் 43 விழுக்காட்டு மரங்களை இழந்துள்ளன என்று WWF உலக வனப் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.