2013-05-27 17:18:38

திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசுவைப் பின்செல்வதற்கு வசதியாக வாழும் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டும்


மே,27,2013. இயேசுவைப் பின்செல்வதற்கு, பொருளாதார ரீதியாக வசதியாக வாழும் கலாச்சாரத்தையும், சிறிதுகாலமே நிலைத்திருக்கும் பொருள்களால் கவரப்படும் கலாச்சாரத்தையும் நாம் விட்டொழிக்க வேண்டும் என்று, இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னிடமுள்ள அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுப் பின்னர் வந்து தன்னைப் பின்பற்றுமாறு இயேசு ஓர் இளைஞரிடம் கூறினார், ஆனால் அந்த இளைஞரோ இதைக் கேட்டு முகம்வாடி வருத்தத்தோடு சென்றதை விளக்கும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இயேசுவைப் பின்செல்வதற்கு நம்மைத் தடுக்கும் இச்செல்வங்கள், இறையாட்சியை நோக்கிய நமது பயணத்துக்கு உதவி செய்யாது என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவை நாம் நெருங்கிச் செல்லாதவாறு தடை செய்யும் செல்வங்கள் நம் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றன என்றும், அவை குறித்து நாம் ஓர் ஆன்மப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் கூறினார்.
நம்மிடமுள்ள இரண்டு கலாச்சார வளங்கள் குறித்துச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், அவற்றுள் ஒன்று, நம்மில் துணிச்சலைக் குறைத்து, நம்மைச் சோம்பேறிகளாகவும், தன்னலவாதிகளாகவும் ஆக்கும் வசதியான பொருளாதார கலாச்சாரம் எனவும் கூறினார்.
ஒரு குழந்தைக்குமேல் வேண்டாம், ஏனெனில் ஒரு குழந்தைக்குமேல் இருந்தால் விடுமுறைக்குச் செல்ல முடியாது, வெளியே செல்ல முடியாது, வீடு வாங்க முடியாது. இத்தகைய பொருளாதார வசதிகள் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை மட்டுமே நாம் இயேசுவைப் பின்செல்ல உதவும் என்று சொல்லி, நம் கலாச்சாரத்தில் இயேசுவைப் பின்செல்லத் தடையாய் இருக்கும் மற்றொரு செல்வம் நிலையற்ற பொருள்கள்மீது கொண்டிருக்கும் அன்பு என்று சொல்லி அது குறித்தும் திருத்தந்தை விளக்கினார்.
இயேசுவின் நிலையான பரிந்துரைகளை நாம் விரும்புவதில்லை, தங்கள் வாழ்வு முழுவதும் மறைபோதகர்களாக வேறொரு நாட்டில் பணி செய்வது, நிலையானது, வாழ்வு முழுவதும் திருமணத்தில் நிலைத்திருப்பது நிலையானது என்றும், நிலையற்றவைகளைக் கொண்டிருப்பது இயேசுவைப் பின்செல்வது அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தக் கலாச்சாரங்களைக் கைவிட்டு வாழ்வில் முன்னோக்கிச் செல்வதற்கு இன்று இயேசுவிடம் வரம் கேட்போம், நம் வாழ்வுப் பயணத்தின் இறுதியில் நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.