2013-05-27 17:20:26

திருத்தந்தை : தந்தை, மகன், தூய ஆவியுடன் உரையாடுவதே கிறிஸ்தவ வாழ்வு


மே,27,2013. தந்தை, மகன், தூய ஆவியார் ஆகியோருடன் உரையாடுவதே கிறிஸ்தவ வாழ்வு, ஏனெனில், தந்தையாம் இறைவன் படைக்கிறார், இறைமகன் காக்கிறார், தூய ஆவியார் அன்புகூர்கிறார் என இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் மறையுரை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்ததாகவும், அதேவேளை, உரோம் நகருக்கு சிறிது வெளியிலும் அமைந்துள்ள புனிதர்கள் எலிசபெத் மற்றும் சக்கரியா பங்குகோவிலுக்கு உரோம் ஆயர் என்ற முறையில் பங்குதளச் சந்திப்பிற்கு இஞ்ஞாயிறன்று சென்ற திருத்தந்தை, புது நன்மை வாங்க காத்திருந்த 16 சிறார்கள் மற்றும் கடந்த வாரங்களில் இத்திருவருட்சாதனத்தைப் புதிதாக பெற்றுள்ள 26 சிறார்களை நோக்கி சில கேள்விகளை முன்வைத்து தன் மறையுரையை வழங்கினார்.
தந்தை மகன், தூய ஆவியார் என மூவராக இருக்கும் மூவொரு கடவுள் குறித்து எவ்விதம் விளக்க முடியும் என சிறார்களிடம் கேள்வியை முன்வைத்த பாப்பிறை, அதற்கான விளக்கங்களை அவரே வழங்கினார்.
தந்தையாம் இறைவனே அனைத்தையும் படைத்தார், இறைமகன் இயேசு இறைவனின் வார்த்தைகளை இவ்வுலகிற்கு கொணர்ந்து நமக்குக் கற்பித்ததுடன், நம்மை மீட்கவும் செய்தார் என்ற திருத்தந்தை, அதேவேளை, தூய ஆவியானவர் நம்மை அன்புச் செய்கிறார் எனவும் எடுத்துரைத்தார்.
நமக்கு உதவி, நமக்கு வழிகாட்டி, நம்மை முன்னோக்கிச் செல்லத் தூண்டும் இயேசு கிறிஸ்து, நமக்குப் பலத்தையும் வழங்கிறார், அந்தப் பலம், அவர் திருநற்கருணையாக நமக்கு வழங்கும் அவர் உடலென்னும் அப்பத்தினால் நம்முள் வருகிறது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.