2013-05-27 16:12:31

கற்றனைத்தூறும்..... காலணிகள்


பல்வேறு செயல்களின்போது பாதங்களைப் பாதுகாப்பதற்கும், வசதிக்காகவும் காலில் அணியப்படும் பொருளே காலணி என்பதாகும். காலணிகளின் வடிவங்கள் காலங்கள் தோறும், கலாச்சாரத்துக்கு கலாச்சாரம் மாறுபடுகின்றன. இவை பொதுவாக தோல், மரம் அல்லது முரட்டுத் துணிகளால் தயாரிக்கப்படுகின்றன. ஆயினும் இவை, இரப்பர், பிளாஸ்டிக் மற்றும் பிற வேதியப் பொருள்களாலும் தயாரிக்கப்படுவது அதிகரித்து வருகின்றது. அர்மேனிய நாட்டுக் குகை ஒன்றில் 2010ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட தோல் காலணி ஏறக்குறைய 5,500 ஆண்டுகள் பழமையுடையதாய், உலகிலே மிகப் பழமையான தோல் காலணியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகத் தொன்மையான காலணிகள் மிதியடிகளாக (செருப்பு) உள்ளன. 5,000 அல்லது 4,000 ஆண்டுகள் பழமையுடைய இந்த மிதியடிகள், 1938ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oregon மாநிலத்தில் Fort Rock குகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்தியர்கள் கி.மு. 3,700க்கும் முன்னரே காலணிகள் அணிந்ததாகத் தெரிகின்றது. ஐரோப்பாவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஒரு ஜோடிக் காலணிகள் பாப்பிரஸ் இலைகளால் ஆனதாய், ஏறக்குறைய 1,500 ஆண்டுகள் பழமையுடையதாய் இருக்கின்றன. இவை எருசலேமில் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் அணியப்பட்டதாய் உள்ளன. பழங்காலத்தில் எகிப்தில் பாப்பிரஸ் மற்றும் பனைவகை இலைகளாலும், இந்தியாவில் மரத்தாலும், சீனாவிலும் ஜப்பானிலும் நெல் வைக்கோலாலும், தென் அமெரிக்காவில் தாழை நாரினாலும் காலணிகள் செய்யப்பட்டுள்ளன. 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களும், கிரேக்கர்களும், உரோமானியர்களும், சீனர்களும் பல்வேறு வகையான காலணிகள் அணிந்ததற்குச் சிற்பங்களும், தொல்லியல் சான்றுகளும் உள்ளன. கால்களைப் பாதுகாப்பதற்கு மட்டும் அணியாமல் அழகுக்காவும் பழங்காலத்திலிருந்தே காலணிகள் அணியப்பட்டுள்ளன.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.