2013-05-25 16:52:39

திருத்தந்தை பிரான்சிஸ் : ஆலயத்தைத் தேடுபவர்கள் ஒருபொழுதும் மூடப்பட்டக் கதவுகளைக் காணக்கூடாது


மே,25,2013. ஆலயத்துக்கு வருகிறவர்கள் திறக்கப்பட்டிருக்கும் கதவுகளைக் காண வேண்டுமேயொழிய, விசுவாசத்தைப் பரிசோதிக்க விரும்புகிறவர்களை அல்ல என்று இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டியதை இயேசு கண்டு கோபம் கொண்டு, அவர்களைத் தடுக்காதீர், ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்று இயேசு சொன்ன இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைமக்களின் விசுவாசம் எளிமையான விசுவாசம், நிறைய இறையியல் இல்லாத விசுவாசமாக ஒருவேளை இருக்கலாம், ஆனால், அது உள்ளார்ந்த இறையியலைக் கொண்டிருக்கின்றது, ஏனெனில் தூய ஆவி இதன்பின்னே இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மரியா யார் என்று அறிய விரும்பினால் இறையியலாளரிடம் போக வேண்டும், ஆனால், மரியாவை எப்படி அன்பு செய்வது என்று அறிவதற்கு இறைமக்களிடம் செல்ல வேண்டும், இது குறித்து அவர்கள் நன்றாகச் சொல்வார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
எரிக்கோ பார்வையிழந்த மனிதர் இயேசு அவ்வழியே செல்வதைக் கண்டு இயேசுவே தாவீதின் மகனே என்மீது இரக்கம் வையும் எனக் கத்தியபோது சீடர்கள் அவரை அதட்டிய நிகழ்வையும் குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் பல நேரங்களில் விசுவாசத்தை ஊக்குவிப்பவர்களாக இல்லாமல், அதனைக் கட்டுப்படுத்துபவர்களாக இருக்கிறோம் என்றும் கூறினார்.
தன்னிடம் நெருங்கி வரவேண்டுமென்று எப்போதும் விரும்பும் இயேசுவை நினைத்துப் பார்ப்போம், ஆலயம் வருகிறவர்கள் அனைவரும் திறந்த கதவுகளைக் காணுமாறு இன்று செபிப்போம் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.