2013-05-25 16:54:24

திருத்தந்தை பிரான்சிஸ் : அடிப்படை மனித மாண்புக்கு ஒத்திணங்கும் வகையில் உலக அளவில் அமைப்பு முறையில் சீர்திருத்தம் தேவை


மே,25,2013. இன்றையப் பொருளாதார நெருக்கடி மற்றும் காட்டுத்தீ போல் பரவிவரும் வேலைவாய்ப்பின்மையைக் களைவதற்கு, அடிப்படை மனித மாண்புக்கு ஒத்திணங்கும் வகையில் உலக அளவில் அமைப்பு முறையில் சீர்திருத்தம் இடம்பெற வேண்டுமென்று என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“Centesimus Annus Pro Pontifice” என்ற நிறுவனம் வத்திக்கானில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஏறக்குறைய 500 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, மனிதரை மையப்படுத்திய, மற்றும் மனிதச் செயல்களையும் உறவுகளையும் அறநெறியோடு நோக்குகின்ற அமைப்பு குறித்து உலகளாவிய அளவில் மறுசிந்தனை தேவை என்று கூறினார்.
ஒருவர் வாழ்வதற்காக ஊதியம் பெறுவதைத் தடுப்பதற்கும், அவர் வேலையின் மாண்பை இழப்பதற்கும் ஆக்குவதைவிட மோசமான வடிவில் பொருளாதார ஏழ்மை இருக்க முடியாது என்றும் உரைத்த திருத்தந்தை, ஏழைகளுக்கு உதவி செய்வது மட்டும் போதாது, மனித மாண்புக்கு ஒத்திணங்கும் வகையில் உலக அளவில் அமைப்பு முறையில் சீர்திருத்தம் தேவை என்றும் கூறினார்.
தற்போதைய நெருக்கடியின் மூல காரணங்கள், பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் மட்டுமல்ல, அறநெறி மற்றும் மனிதயியல் சார்ந்த நெருக்கடிகளும் ஆகும், இங்கே, அதிகாரத்தின், இலாபத்தின், பணத்தின் தெய்வங்கள் மனிதரைவிட மதிக்கப்படுகின்றன என்று சாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொதுநிலையினரின் கல்விக்கும், கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாடுகளை அறிவிப்பதற்குமென 1993ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் Centesimus Annus Pro Pontifice என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.