2013-05-23 16:46:46

திருத்தந்தை பிரான்சிஸ் : உலகின் உப்பாக இருங்கள்


மே,23,2013. விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் ஆன்மீக உப்பைப் பரப்புவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்க வேண்டுமென இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் பங்கு கொண்ட விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு நமக்குக் கொடுக்கும் ஆன்மீக உப்பு சேமித்து வைக்கப்படக் கூடாது, அது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், அதாவது இந்த உப்பின் செய்தியையும், அதன் அரும்பெரும் செல்வத்தையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், இல்லாவிடில் கிறிஸ்தவர்கள் ஓர் அருங்காட்சியகப் பொருளாக மாறிவிடும் ஆபத்தை எதிர்நோக்குவர் என்று கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்களின் வாழ்வில் உப்பு என்பது என்ன, இயேசு நமக்கு வழங்கிய உப்பு எது என்ற கேள்வியை தனது மறையுரையில் எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் பிறருக்காக வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இயேசு நமக்கு வழங்கும் உப்பு, விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் ஆன்மீக உப்பு என்றும், நம்மை மீட்பதற்காக இறந்து உயிர்த்த இயேசு வழங்கிய இந்த உப்பு ருசியின்றி மாறிவிடக் கூடாது, அது தனது சாரத்தை இழந்துவிடக் கூடாது என்றும், இது சேமித்து வைக்கப்படக் கூடாது, பாட்டிலில் இதைப் பாதுகாத்து வைத்தால் இது பயனற்றுப் போகும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.
பொருள்களோடு உப்பைச் சேர்க்கும்போது அவை ருசி பெறுகின்றன எனவும், நாம் பெற்றுள்ள உப்பு ருசி பெறுவதற்கு அது பிறரோடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இந்த உப்பை உணவு நேரங்கள், பிறருக்குப் பணி செய்வது ஆகிய வேளைகளில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனத் தனது மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த உப்பை போதிப்பதன் மூலம் மட்டும் சேமித்து வைக்க முடியாது, மாறாக, இதற்குத் தியானம், செபம், வழிபாடு ஆகியவையும் அவசியம் என்றும் கூறினார்.
இந்த உப்பை, திருமுழுக்கிலும், உறுதிபூசுதலிலும், மறைக்கல்வியிலும் தான் பெற்றுக் கொண்டதாக இவ்வியாழன் காலை மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.