2013-05-23 16:46:53

திருத்தந்தை பிரான்சிஸ், எல் சால்வதோர் அரசுத்தலைவர் சந்திப்பு


மே,23,2013. மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோர் அரசுத்தலைவர் Carlos Mauricio Funes Cartagena அவர்களை இவ்வியாழனன்று காலை 11 மணிக்குத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் எல் சால்வதோர் அரசுத்தலைவர் Mauricio Funes.
ஏறத்தாழ அரைமணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்புக்களில் எல் சால்வதோர் நாட்டுக்கும் திருப்பீடத்துக்குமிடையே நிலவும் சுமுகமான உறவுகள் குறித்து இருதரப்பினரும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர் என்றுரைத்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், அந்நாட்டின் இறையடியாரான சான் சால்வதோர் முன்னாள் பேராயர் Oscar Arnulfo Romero y Galdámez குறித்தும், அவரின் சாட்சிய வாழ்வு அந்நாட்டினருக்கு அவசியம் என்பது குறித்தும் வலியிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
எல் சால்வதோர் நாட்டின் ஒப்புரவு, அமைதி, கல்வி, பிறரன்புப்பணிகள், வறுமை ஒழிப்பு, திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் ஒழிப்பு ஆகியவற்றுக்குக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் சேவைகளை அரசுத்தலைவர் Mauricio Funes இச்சந்திப்புக்களில் பாராட்டியதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
அத்துடன் மனித உரிமைகள், திருமணம் மற்றும் குடும்பவாழ்வைப் பாதுகாத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டதாக அவ்வலுவலகம் மேலும் கூறியது.
மேலும், இறையடியார் பேராயர் Romeroவின் குருதியை எல் சால்வதோர் அரசுத்தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்கியதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறியுள்ளார்.
எல் சால்வதோர் நாட்டின் மனித உரிமை மீறல்களை வெளிப்படையாய்க் கண்டித்துப் பேசிய பேராயர் Romero, மருத்துவமனை ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது 1980ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். எல் சால்வதோரின் உள்நாட்டுச் சண்டையில் ஏறக்குறைய 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.