2013-05-23 16:47:14

சிரியக் கிறிஸ்தவர்களூக்கான மனிதாபிமான உதவிகளில் கேரளக் கிறிஸ்தவர்கள்


மே,23,2013. சிரியாவின் உள்நாட்டுப் போரால் சாவுகளும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவரும் நிலையில் அம்மக்களுக்கு உதவும் நோக்குடன் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளனர் கேரளாவின் கிறிஸ்தவர்கள்.
இதுவரை சிரியாவின் உள்நாட்டுப்போரால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகக் கூறும் கேரளாவின் ஜேகோபைட் கிறிஸ்தவ அவை, சிரியக் கிறிஸ்தவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
சிரியக் கிறிஸ்தவர்களுடன் ஆன ஒருமைப்பாட்டுடன் திரட்டப்படும் இந்த நிதி சிரியா கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் கிறிஸ்தவக்குழு ஒன்றால் நேரடியாகச் சென்று வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜோர்தானில் உள்ள சிரிய அகதிகளுக்கு என 98 இலட்சம் டாலர்களை அவசரகால உதவியாக வழங்கியுள்ளது ஐ.நா. அமைப்பு.
கோடைகாலம் நெருங்கிவரும் வேளையில், ஜோர்தானில் வாழும் சிரிய அகதிகளுக்கு குடிநீரும் முகாம்களும் வழங்க இந்நிதி உதவி செலவழிக்கப்படும் என்றார் ஐ.நா. அதிகாரி ஆன்ட்ரூ ஹார்ப்பர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.