2013-05-22 17:08:45

வரவேற்பும், குடும்ப உணர்வும் உள்ள ஓர் இடத்தையே நாம் இல்லம் என்று அழைக்கிறோம் - திருத்தந்தை பிரான்சிஸ்


மே,22,2013. மனமார்ந்த வரவேற்பும், நலமுடன் வாழ்வதற்குரிய சூழலும், குடும்ப உணர்வும் உள்ள ஓர் இடத்தையே நாம் இல்லம் என்று அழைக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தையொட்டி அமைந்துள்ள 'Dono di Maria' அதாவது 'மரியாவின் கொடை' என்று அழைக்கப்படும் இல்லத்திற்கு இச்செவ்வாய் மாலை சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு வாழ்வோர், மற்றும் பணிபுரிவோருக்கு ஆற்றிய சிறு உரையில் இவ்வாறு கூறினார்.
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா உருவாக்கிய துறவறச்சபை அருள் சகோதரிகளின் பணிகளுக்கென, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், அச்சகோதரிகளுக்கு வழங்கிய இல்லம் 'Dono di Maria'. இவ்வில்லத்தின் 25ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வில்லத்திற்குச் சென்றிருந்தார்.
இறையன்பு வெறும் ஏட்டளவு எண்ணமல்ல, அது உடலும் உயிரும் கொண்ட ஓர் உண்மை என்பதை, முத்திப்பேறு பெற்ற இருவரின் கொடையாக அமைந்துள்ள இவ்வில்லம் உலகிற்குப் பறைசாற்றுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
இவ்வில்லத்தில் தங்கி பணியாற்றும் அருள் சகோதரிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றும் பல தன்னார்வத் தொண்டர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
இச்செவ்வாய் மாலை 'Dono di Maria' இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை அவர்களை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் முதன்மை குரு, கர்தினால் Angelo Comastri அவர்களும், பிறரன்புப்பணி அருள் சகோதரிகளின் தலைவி Prema Pierick அவர்களும் வரவேற்றனர்.
இவ்வில்லத்தில் 25க்கும் அதிகமான பெண்கள் தங்கியுள்ளனர், மற்றும் ஒவ்வொரு நாளும் இவ்வில்லம் 60க்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.