2013-05-22 16:55:43

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 22, 2013. ஒவ்வொரு வாரமும் திருத்தந்தையின் பொதுமறைபோதகத்தில் பங்குபெறவரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருவது, நாம் ஏற்கனவே அறிவித்ததுதான். இந்நாட்கள் இந்தியாவுக்கு கோடைவிடுமுறைகாலம் என்பதால், இந்தியாவிலிருந்து வரும் திருப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. இவ்வாரமும் கடந்த வாரமும் பெரிய அளவில் தமிழகத் திருப்பயணிகளின் கூட்டத்தையும் புதன் பொதுமறைபோதகத்தின்போது காணமுடிந்தது. 'நம் விசுவாசப்பிரமாணம் குறித்த மறைபோதகத்தில், கடந்த நாட்களில், தூய ஆவி குறித்து நோக்கிவந்த நாம், இன்று, ‘ஒரே, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருஅவையை விசுவசிக்கின்றேன்’ என்ற நம் அறிக்கை குறித்து நோக்குவோம் என, தன் மறையுரையைத் தொடர்ந்தார் பாப்பிறை பிரான்சிஸ்.
தூய ஆவியும் திருஅவையும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. அனைத்து மக்களையும் சீடராக்கும்வண்ணம் கிறிஸ்து நமக்கு வழங்கிய கட்டளைப் பணியை ஏற்று நடத்த உதவும் வண்ணம், தூய ஆவியானவர் திருஅவையையும், அதற்குள் வாழும் நம்மையும் எழுச்சியூட்டி வழிநடத்துகிறார். நற்செய்தியின் உண்மைக்கும் வனப்புக்கும் அவரே நம் இதயங்களையும் மனங்களையும் திறக்கிறார். ஒன்றிப்பை உருவாக்கி ஐக்கியத்தையும், இணக்க வாழ்வையும், அன்பையும் கொணர்வதன்மூலம், சுயநலப்போக்குகளையும் பிரிவினைகளையும் மேற்கொள்ள உதவுகிறார் தூய ஆவி. உயிர்த்த கிறிஸ்துவுக்கு உறுதியான சாட்சிகளாக விளங்குவதற்கு தேவையான பலத்தை நம்முள் ஊட்டுபவர் தூய ஆவியே. அவரே மறைப்பணி மற்றும் நற்செய்தி அறிவிப்பின் ஆவியானவர்.
சீடர்களின் தணியாப்பற்றுடைய செபத்தின் பதிலுரையாக தூய ஆவியின் நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் அவர்கள் மீது மேலிருந்து அனுப்பப்பட்டன. தூயஆவியை நோக்கிய தொடர்ந்த ஒன்றிப்பின் செபமே கிறிஸ்தவர்களுக்குரிய நம் வாழ்வின் இதயமாகவும், நற்செய்தி அறிவிப்பின் ஆன்மாவாகவும் எப்போதும் இருக்கவேண்டும். தூய ஆவியின் செயலாற்றலில் நம் நம்பிக்கையை தினமும் புதுப்பிப்போம், அவரின் தூண்டுதல்களுக்கும் கொடைகளுக்கும் நம் இதயங்களைத் திறந்தவர்களாகச் செயல்படுவோம், நம் மனிதகுல குடும்பத்தின் மத்தியில் இறைவனுடன் ஆன ஒன்றிப்பின் மற்றும் ஐக்கியத்தின் அடையாளங்களாக இருக்க முயல்வோம்.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oklahoma கடும்சூறாவளிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, குறிப்பாக தங்கள் குழந்தைகளை இந்த இயற்கைப்பேரிடரில் இழந்துள்ள பெற்றோருக்காகச் சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அழைப்புவிடுத்தார். தன் மறைபோதகத்தின் இறுதியில், சீனாவில் இவ்வெள்ளிக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் ஷங்கையின் Sheshan திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட உள்ள சகாய அன்னை திருவிழா குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, சீனாவில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்காக உலகில் உள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் Sheshan அன்னைமரியை நோக்கி மக்களோடு இணைந்து செபிக்கவும் செய்தார் திருத்தந்தை. இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்திக்கு இயைந்தவகையில் வாழ்வது என்பது, சுயநலப்போக்குகளுக்கு எதிராகப் போராடுவதாகும். நற்செய்தி என்பது மன்னிப்பும் அமைதியுமாகும். அது இறைவனிடமிருந்து வரும் அன்பாகும், என தன் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.