2013-05-21 15:37:45

விவிலியத் தேடல் – 'நள்ளிரவில் நண்பர்' உவமை: பகுதி 2


RealAudioMP3 1992ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் பூமிக்கோள உச்சிமாநாடு (Earth Summit) நடைபெற்றது. 172 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்ட அந்த உச்சிமாநாட்டில் Severn Suzuki என்ற 12 வயது சிறுமி 6 நிமிடங்கள் பேசினார். "The Little Girl Who Shocked World Leaders Into Silence" "உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி" என்ற தலைப்பில் இவரது உரை இன்னும் இணையதளத்தில் உள்ளது. இச்சிறுமியின் உரையை நாம் ஏற்கனவே ஓரிரு முறை நம் சிந்தனைகளில் பகிர்ந்துள்ளோம். இன்று மீண்டும் ஒரு முறை அந்த உரையின் ஒரு சில வரிகளைக் கேட்போம்:
நானும் என் நண்பர்கள் மூவரும் எங்கள் சொந்த முயற்சியில் 6000 மைல்கள் கடந்து வந்திருக்கிறோம் உங்களைச் சந்திப்பதற்கு. நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.
வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. இவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாளும் நான் கேட்டு வருகிறேன். அதனால், எனக்குப் பயமாக உள்ளது.

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினார். அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.
நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப்பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.
இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.
காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.
உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.

Severn Suzuki பேசியபோது பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர் குற்ற உணர்வோடு அந்தச் சிறுமியை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் அச்சிறுமி பேசி முடித்தார்.
பயந்து கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளைப் பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும் என்று சொல்லி குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள். எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? ‘எல்லாம் சரியாகிப் போகும் என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்ல முடியுமா? எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள். இது நான் உங்கள் முன் வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவி மடுத்ததற்கு நன்றி.

அத்தலைவர்களுக்கும், இவ்வுலகினர் அனைவருக்கும் Severn Suzuki உண்மையிலேயே ஓர் அதிர்ச்சி மருத்துவம் அளித்தார். அவர் அளித்த அதிர்ச்சி ஓரளவு பயன் தந்தது என்றே சொல்லவேண்டும். உலகில் வாழ்வது மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல, நம்மோடு பல கோடி உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்களை மதித்து, அவற்றோடு இவ்வுலக வளங்களைப் பகிர்ந்து, அவற்றோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் வாழமுடியும் என்ற தீர்மானம் இந்த உச்சி மாநாட்டில் 1992ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை மனிதகுலம் மறந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், ஐ.நா. பொதுஅவை மேமாதம் 22ம் தேதியை, 'பல்வேறு உயிரின அகில உலக நாள்' (International Day for Biological Diversity) என்று கொண்டாடிவருகிறது.

இந்த உலக நாள் பிறந்து இன்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எந்த ஒரு மனிதப் பிறவியும் 20 வயதுக்குள் ஓரளவு அறிவு முதிர்ச்சியும், தெளிவும் பெற்று நல்ல முடிவுகள் எடுக்கும் நிலையை அடைவது வழக்கம். ஆனால், இன்றைய மனிதகுலத்தின் நிலை என்ன? 'பல்வேறு உயிரின அகில உலக நாளை' ஆரம்பித்து 20 ஆண்டுகள் கடந்தபின்னும், ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நாம், ஏனைய மனிதர்களை, ஏனைய உயிரினங்களை மதித்து, அவர்களுடன் இவ்வுலகின் செல்வங்களைப் பகிர்ந்து வாழ்கிறோமா? எளிதில் பதில் சொல்லமுடியாத சங்கடமான கேள்வி இது...
இவ்வுலகம் மனிதருக்கு மட்டுமே சொந்தம், அதுவும், வசதி, வாய்ப்பு, செல்வம் இவற்றைக் குவித்துள்ள மனிதருக்கு மட்டுமே சொந்தம் என்ற போக்கில் மனித சமுதாயம் இயங்கி வருகிறது. மனித சமுதாயத்தில் வலுவிழந்தவர்கள் எனக் கருதப்படும் குழந்தைகள், முதியோர், வறியோர், நோயுற்றோர் ஆகிய அனைவருக்கும் இவ்வுலகில் இடம் உண்டு. ஏனைய உயிரினங்கள் அனைத்திற்கும் இவ்வுலகில் இடம் உண்டு. இவ்வுலகம் என்ற இல்லத்தை அனைவரோடும், அனைத்து உயிரினங்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவுறுத்தும் நாள் மே 22 - பல்வேறு உயிரின அகில உலக நாள்.

இந்த நாளில் 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையை நாம் சிந்திக்க வந்திருப்பதை இறைவன் நமக்கு வழங்கிய ஓர் அருள் வாய்ப்பாக நான் கருதுகிறேன். எளியதொரு கிராமத்தில் இன்றும் நாம் காணக்கூடிய ஓர் இல்லத்தை இயேசு இந்த உவமையில் அழகாக விவரித்துள்ளார். இந்த உவமையை நான் வாசித்தபோது, இயேசு அங்கு விவரிக்கும் கிராமக் குடும்பத்தைக் கற்பனை செய்து பார்த்தபோது, புனித யோசேப்பு, அன்னை மரியா இயேசு என்ற திருக்குடும்பம் நாசரேத் எனும் சிற்றூரில் வாழ்ந்த இல்லம் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வி என் உள்ளத்தில் எழுந்தது. யோசேப்பு பரம ஏழை அல்ல, அவர் ஒரு தொழிலாளி. எளிய ஒரு தொழிலாளியின் இல்லத்தை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
இன்றைய உலகில் நாம் இல்லம் என்று எண்ணிப்பார்த்ததும், அங்கு பல அறைகள் இருப்பதாக எண்ணுகிறோம். படுக்க ஓர் அறை, படிக்க ஓர் அறை, சமைக்க ஓர் அறை ... என்று பல அறைகள் கொண்டதே ஒரு வீடு என்று எண்ணிப் பார்க்கிறோம். எளிய தொழிலாளியான யோசேப்புவின் வீடு இத்தகையது அல்ல. ஓர் அறை கொண்ட அவரது இல்லத்தில் சமையல், தொழில், ஒய்வு என்று அனைத்தும் ஒரே இடத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய இல்லத்தில் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்துவந்த இயேசு, தன் சொந்த அனுபவத்திலிருந்து இந்த உவமையைச் சொல்கிறார்.

இந்த உவமையை, "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று" என்று இயேசு துவக்குவது மற்றொரு தெளிவை நமக்குத் தருகிறது. அதாவது, இயேசுவைச் சுற்றி நின்ற பலரும் இக்கதையில் வரும் பாத்திரங்களாக மாறும்படி இயேசு அழைப்பு விடுத்தார். எளிதான ஓர் அழைப்பு இது... ஏனெனில், அவர்களில் பலர் வாழ்ந்த வாழ்வைத் தான் அவர் படம்பிடித்துக் காட்டுகிறார் இந்த உவமையில்.
இறைவனிடம் வேண்டுவது எவ்விதம் அமையவேண்டும் என்பதற்காக இயேசு இந்த உவமையைக் கூறியிருந்தாலும், இங்கு இயேசு குறிப்பிடும் எளியோரின் வாழ்வு வேறுபல பாடங்களையும் சொல்லித் தருகின்றது. அவற்றில் ஒன்று, இன்று நாம் கடைபிடிக்கும் ‘பல்வேறு உயிரின அகில உலக நாளு’டன் தொடர்பு கொண்டது. தன் குழந்தைகளுடன் ஒரே இடத்தைப் பகிர்ந்து உறங்கும் நண்பரின் நிலை, நாம் இந்த பூமி என்ற இல்லத்தை எவ்விதம் பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும், ஏனைய உயிரினங்களையும் எவ்விதம் மதித்து வாழமுடியும் என்பதைச் சொல்லித் தருகிறது.
படுத்திருக்கும் நண்பரின் இல்லம் ஒரே ஓர் அறையைக் கொண்டது. அங்கு அவர், தன் மனைவி, குழந்தைகளுடன் உறங்குகிறார். ஒருவேளை, அவர்கள் வீட்டில் வளர்ந்துவரும் செல்ல மிருகங்களும் அதே அறையில் ஒரு மூலையில் கட்டிப் போடப்பட்டிருக்கலாம். மிருகங்கள் கட்டிப்போடப்பட்டிருந்த ஒரு தொழுவத்தில் பிறந்தவர்தானே இயேசு. தன் பிறப்பின் மூலம் அவர் சொல்லாமல் சொன்ன ஒரு பாடத்தை, இன்று மற்றொரு உவமையின் மூலம் கூறுகிறார். பகுதிகள், பிரிவுகள் என்று நாம் வாழும் வாழ்வுக்கும், பிரிவுகள் இல்லாத எளிய, முழுமையான நமது முன்னோரின் வாழ்வுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட நாம் இந்த உவமையை எண்ணிப் பார்க்கலாம்.

நான் பிறந்து, வளர்ந்த இல்லத்தில் பல அறைகள் கிடையாது. சிறு வயதில் நாங்கள் அனைவரும் ஓரிரு அறைகளில் படுத்துறங்குவோம். அதே அறைகளில் பாடங்கள் பயின்றோம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் இந்த அறைகளைப் பகிர்ந்துகொண்டோம். இவற்றில் எவ்விதத் தொல்லையும் இருந்ததாக நாங்கள் உணர்ந்ததில்லை. என் துறவறப் பயிற்சிக் காலத்தில், வசதிகள் மிகவும் குறைந்தவர்கள் இல்லங்களுக்கு நான் பல முறை சென்றுள்ளேன். வசதிகள் அற்ற அந்த இல்லங்களில் ஒரு முழுமையை, நிறைவை நான் பல முறை அனுபவித்திருக்கிறேன். இந்த இல்லங்களில் பல்வேறு அறைகள், அவற்றைப் பிரிக்கும் சுவர்கள் இல்லாததைப் போலவே, அவர்கள் வாழ்வும் பல்வேறு பிரிவுகளால் பாதிக்கப்படாத வாழ்வாக இருந்ததை என்னால் உணர முடிந்தது.
வசதிகள் கூடக் கூட, வாழ்வு பல பகுதிகளாக மாறுகின்றது. நாமாகவே உருவாக்கிக் கொண்ட இப்பகுதிகள் ஒன்றோடொன்று மோதும் சூழல்கள் உருவாகின்றன. குடும்பம், தொழில், ஒய்வு என்று பல பகுதிகளை நாம் வெளி உலகில் உருவாக்குவதுபோல், நம் இல்லங்களிலும் குடும்ப உறவுகளில் பல்வேறு பகுதிகளை, அவைகளை மறைக்கும் தடுப்புச் சுவர்களை உருவாக்கி விடுகிறோம். பல பகுதிகளாகப் பிரிந்திருக்கும் வாழ்வை ஒருங்கிணைக்க இயலாமல் தவிக்கிறோம்.
இவ்விதம் பகுதிகளாக்கப்படாமல், எளிமையான, அதே நேரம் ஒருங்கிணைந்த வாழவைக் கொண்டுள்ள மக்களை இயேசு இந்த உவமையின் வழியாக நம்முன் நிறுத்துகிறார். இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்களில் ஒரு சில இதோ:


'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையின் வழியாக இயேசு இந்த பாடங்களைச் சொல்லித்தர வரவில்லை என்றாலும், இந்த உவமையில் அவர் தீட்டியுள்ள எளியதொரு வாழ்வு, பகிர்வைப்பற்றி, பல்வேறு பாடங்களைச் சொல்லித் தருகின்றது. மே மாதம் 22ம் தேதி நாம் கடைபிடிக்கும் ‘பல்வேறு உயிரின அகில உலக நாளு’க்கேற்ற பாடங்கள் இவை... இப்பாடங்களை நாம் மீண்டும் ஒரு முறை பயில முயல்வோமா?








All the contents on this site are copyrighted ©.