2013-05-21 15:25:23

Oklahomaவில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருத்தந்தை செபம்


மே,21,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oklahomaவை இத்திங்களன்று தாக்கிய கடும் புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் கடும் புயலில் இறந்தவர்களின் குடும்பங்கள், குறிப்பாக, இளம் சிறாரை இழந்துள்ள குடும்பங்களுக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்திருப்பதோடு, இம்மக்களுக்காக அனைவரும் தன்னோடு சேர்ந்து செபிக்குமாறும் கேட்டுள்ளார்.
மேலும், இச்செவ்வாய் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய திருப்பலியிலும் Oklahomaவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் சிறப்பாகச் செபித்தார்.
இத்திங்களன்று மணிக்கு 200 மைல் வேகத்தில் வீசிய கடும் புயலில் ஓர் ஆரம்பப் பள்ளி அழிக்கப்பட்டுள்ளது. 20 சிறார் உட்பட குறைந்தது 50 பேர் இறந்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.