2013-05-20 17:04:34

திருத்தந்தை : வெளிஉலகில் சென்று பணிபுரியும் ஒரு திருஅவை இன்று தேவைப்படுகிறது


மே 20, 2013. மனிதகுலம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இக்காலக்கட்டத்தில் தன்னையே மறைத்து வாழும் ஒரு திருஅவை அல்ல, வெளிஉலகில் சென்று பணிபுரியும் ஒரு திருஅவை இன்று தேவைப்படுகிறது என்றார் திருத்தந்தை.
தூயஆவியாரின் பெருவிழாவுக்கு முன், சனிக்கிழமை மாலை திருவிழிப்புச்சடங்கில் கலந்துகொண்ட இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய உலகம் பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் நலனுக்குக் கொடுப்பதில்லை என்றார்.
பொருளாதாரச் சரிவும், வீழ்ச்சியும் பெரும் செய்திகளாக முக்கியத்துவம் கொடுக்கப்படும்வேளை, ஒரு தொழிலாளியின் சாவோ, குழந்தையின் பசியோ முக்கியத்துவம் பெறுவதில்லை என்ற கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகில் மதநம்பிக்கைகளுக்காகச் சித்ரவதைகளை அனுபவிக்கும் மக்களுக்காக செபிக்கவேண்டும் என அழைப்புவிடுத்த பாப்பிறை பிரான்சிஸ், மதசுதந்திரத்திற்காக ஒவ்வொருவரும் உழைக்கவேண்டியதன் கடமையையும் வலியுறுத்தினார்.
திருஅவை என்பது ஒரு அரசு சாரா சமூக அமைப்பு அல்ல, மாறாக நற்செய்தியை வாழ்வதே அது இவ்வுலகிற்கு வழங்கும் பங்களிப்பாகும் எனவும் கூறினார் திருத்தந்தை. உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற இத்திருவிழிப்பில் கலந்து கொண்ட விசுவாசிகளுள் பெரும்பான்மையினோர் 'திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்க' என்ற அட்டைகளைத் தாங்கியவர்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் என சப்தமிட்டுக்கொண்டிருக்க, அவர்களை நோக்கி புதியதொரு விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை. திருத்தந்தை வாழ்க என கூறுவதற்கு பதிலாக இயேசுகிறிஸ்து வாழ்க என இனிமேல் கூறுமாறுக் கேட்டுக்க்கொண்டார்.
திருத்தந்தையுடன் மக்கள் கலந்துகொண்ட இத்திருவிழிப்பு வழிபாட்டில் அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரும், பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சரும், ஷப்பாஸ் பாட்டியின் சகோதரரும் ஆன பால் பாட்டியும் தங்கள் விசுவாச அனுபவங்களை அங்கு குழுமியிருந்தோருடன் பகிர்ந்துகொண்டனர். அதன்பின் இளையோருள் நான்குபேர் திருத்தந்தைக்கு கேள்விகளை முன்வைக்க அவர்களுக்கு பதிலுரை வழங்கினார் திருத்தந்தை.
தன் பாட்டியிடமிருந்தும், தாயிடமிருந்தும் ஆழமான சுவாசத்தைக் கற்றுக்கொண்டதாக உரைத்த திருத்தந்தை, நம் விசுவாசத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்கான சிறந்த வழி சாட்சிய வாழ்வே எனக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.