2013-05-18 15:35:32

திருத்தந்தை பிரான்சிஸ் : அன்னைமரியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்


மே,18,2013. நாம் அன்னைமரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், கிறிஸ்துவை தமது வாழ்வில் ஏற்பதற்கு வரையறையின்றித் தயாராக இருந்த அன்னைமரியாவை நாம் பின்பற்ற வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் @Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் இச்செய்தி இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறும் தூய ஆவிப் பெருவிழாவின் திருவிழிப்புச் செபவழிபாட்டில் பாகிஸ்தான் அமைச்சர் Paul Bhatti தனது சகோதரர் Shahbaz Bhattiயின் சாட்சிய வாழ்வு குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொள்ளும் இவ்வழிபாட்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.
பாகிஸ்தானின் சிறுபான்மைத்துறை அமைச்சராகவும், அந்நாட்டின் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராகவும் பணியாற்றிய Shahbaz Bhatti, 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தனது 43வது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அந்நாட்டின் தெய்வநிந்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வந்தவர்.
மேலும், தூய ஆவிப் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் திருஅவையின் பல்வேறு பொதுநிலை பக்த இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.