2013-05-18 15:33:12

திருத்தந்தை பிரான்சிஸ், ஜெர்மன் சான்சிலர் சந்திப்பு


மே,18,2013. ஜெர்மன் சான்சிலர் Angela Merkel அவர்களை இச்சனிக்கிழமை காலை 11 மணிக்குத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஜெர்மன் சான்சிலர் Merkel.
இச்சந்திப்புக்களில் ஜெர்மனிக்கும் திருப்பீடத்துக்குமிடையேயான நீண்டகால உறவுகள் நினைவுகூரப்பட்டதாகத் தெரிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், ஐரோப்பாவிலும், உலகிலும் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சமய விவகாரங்கள் குறித்தும், சிறப்பாக, மனித உரிமைகள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சமய சுதந்திரம், அமைதியை ஊக்குவிப்பதில் உலக அளவிலான ஒத்துழைப்பு ஆகியவையும் பேசப்பட்டதாகக் கூறியது.
ஐரோப்பிய சமுதாயம் உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும், மனித மாண்பு மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வில் அமைக்கப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவாக ஐரோப்பிய அரசு மற்றும் சமயங்கள் நிறுவனங்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டியது குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாப்பிறைப் பணியை ஏற்ற திருப்பலியில் கடந்த மார்ச் 19ம் தேதியன்று ஜெர்மன் சான்சிலர் Angela Merkel கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.