2013-05-17 16:32:05

திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் பாவிகள் என்பது பிரச்சனையல்ல, ஆனால் நாம் அதற்காக மனம் வருந்தாமல் இருப்பதே பிரச்சனை


மே,17,2013. நாம் அனைவரும் பாவிகள், நாம் பாவிகள் என்பது பிரச்சனையல்ல, ஆனால் நாம் மனம் வருந்தாமல் பாவநிலையிலே இருப்பதும், நம் ஆண்டவரைச் சந்திப்பதற்குத் திறந்தமனது இல்லாமல் இருப்பதுமே பிரச்சனை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, பேதுரு போன்று இயேசுவால் உருவாக்கப்படுவதற்கு நாமும் நம்மை அனுமதிக்காமல் இருப்பதே பிரச்சனை என்று கூறினார்.
உயிர்த்த கிறிஸ்து பேதுருவிடம், நீ என்னை அன்பு செய்கிறாயா? என்று மூன்று முறை கேட்ட இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நம் ஆண்டவருக்கும், அவரின் சீடர் பேதுருவுக்கும் இடையே இடம்பெற்றது அன்பின் உரையாடல் என்றும் கூறினார்.
பேதுருவுக்கும் இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற பல சந்திப்புகள் குறித்து விளக்கிய திருத்தந்தை, இச்சந்திப்புகளில் இயேசு, பேதுருவின் ஆன்மாவையும், இதயத்தையும் பக்குவப்படுத்தினார், பேதுருவை அன்பில் பக்குவப்படுத்தினார் என்றும் கூறினார்.
யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்று பேதுருவிடம் மூன்று முறை கேட்டு, தான் ஒரு பாவி என்பதை பேதுருவை உணரச் செய்கிறார் இயேசு, அதேபோல் நம்மையும் பாவி என உணரச் செய்கிறார், ஆனால், நமது பாவத்திற்காக நாம் மனம் வருந்தாததே, நாம் செய்தவைகளை நினைத்து வெட்கப்படாததே பிரச்சனை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் ஆண்டவர் நம்மைக் கைவிடுவதில்லை, இயேசுவால் தான் மாற்றமடைய பேதுரு தன்னை அனுமதித்தார், பேதுரு நல்லவர் என்பதால் அவர் பெரியவர் அல்ல, ஆனால் அவர் நேர்மையானவர், நேர்மையான இதயத்தைக் கொண்டிருந்தார், இந்த நேர்மையே, அவரைக் கண்கலங்க வைத்தது, அவரை வேதனையடையச் செய்தது, இதனாலே அவரால் தமது மந்தையை மேய்க்கும் பணியைச் செய்ய முடிந்தது என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த மனிதரின் எடுத்துக்காட்டான வாழ்வை நாமும் பின்செல்ல ஆண்டவரிடம் அருள் கேட்போம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நம் ஆண்டவரைச் சந்திப்பதற்கு நம்மைத் திறந்து வைப்பதே முக்கியமானது என்று தனது மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.