2013-05-16 16:50:14

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனித்துவம் மிகுந்த ஒரு மனிதப் பிறவி - காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்


மே,16,2013. உரோமையில் புனித பேதுருவின் திருப்பீடத்தில் அமர்ந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனித்துவம் மிகுந்த ஒரு மனிதப் பிறவி என்றும், அவரைச் சந்திக்கும் அனைவரும் மகிழ்வில் நிறைவது நிச்சயம் என்றும் அலெக்ஸ்சாந்திரியாவின் திருத்தந்தை என்றழைக்கப்படும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்கள் கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி முதல் 13ம் தேதி முடிய வத்திக்கானில் திருத்தந்தையின் விருந்தினராகத் தங்கியிருந்த முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தனக்கு அனுப்பியிருந்த வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லவும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைக் கூறவும் தான் வத்திக்கான் வந்திருந்ததாகக் கூறினார் இரண்டாம் Tawadros அவர்கள்.
அலெக்ஸ்சாந்திரியாவின் திருத்தந்தையருக்கும் உரோமையத் திருத்தந்தையருக்கும் இடையே கடந்த 40 ஆண்டுகளில் மும்முறை சந்திப்புக்கள் நிகழ்ந்துள்ளதை மகிழ்வுடன் சுட்டிக்காட்டிய இரண்டாம் Tawadros அவர்கள், இந்த உறவு வளர்வதற்கு மே மாதம் 10ம் தேதியை ஒரு நினைவு நாளாகக் கொண்டாடும் தன் விருப்பத்தை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.