2013-05-16 16:45:24

அப்போஸ்தலிக்க ஆர்வம் மடமையாகத் தெரிந்தாலும், நலமானதொரு மடைமை - திருத்தந்தை பிரான்சிஸ்


மே,16,2013. ஒரு கண்ணோட்டத்தில் நோக்குகையில், அப்போஸ்தலிக்க ஆர்வம் மடமையாகத் தெரிகிறது, ஆயினும் இது ஆன்மீக மடமை, நலமானதொரு மடமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலையில் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களோடும், ஆயர் மாரியோ தோசோ அவர்களோடும், இன்னும் பிற அருள் பணியாளர்களோடும் கூட்டுத் திருப்பலியாற்றிய திருத்தந்தை, புனித பவுல் அடியாரின் அப்போஸ்தலிக்க ஆர்வத்தை தன் மறையுரையில் மையப்படுத்திப் பேசினார்.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் பணியாளர்களும், வத்திக்கான் வானொலி பணியாளர்களின் ஒரு குழுவினரும் கலந்து கொண்ட இத்திருப்பலியில், கிறிஸ்துவை அறிவிக்கும் பணியில் நாம் சோர்வடையக் கூடாது என்பதை எடுத்துரைத்தார் திருத்தந்தை.
புனித பவுல் அடியார் கிறிஸ்துவின் மீது தான் கொண்டிருந்த ஆர்வத்தினால், பிறருக்கு ஒரு தொல்லையாகவும், பிறர் பார்வையில் மதி இழந்தவர் போலவும் தோன்றினாலும், அதுவே கிறிஸ்தவ ஆர்வம் என்பதை உலகறியச் செய்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
வகுப்பறையில் கடைசி இருக்கைகளில் அமர்பவர்களைப்போல, திருஅவை செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டத் தயங்குபவர்கள், யாரையும் இறைவனிடம் கொண்டுவருவதில்லை என்ற உருவகத்துடன் திருத்தந்தை தன் மறையுரையை ஆற்றினார்.
நாம் 'பகுதி நேர'க் கிறிஸ்துவர்களாக இருக்க முடியாது, நமது நம்பிக்கையை தினமும், ஒவ்வொரு கணமும் வாழும் வழிகளைத் தேடவேண்டும் என்ற Twitter செய்தியை இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எட்டு மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.