2013-05-16 16:52:04

Cloning முறையில் மனிதக் கருவை உருவாக்கும் முயற்சி மனித மாண்பை அழிக்கும் - கர்தினால் Sean O'Malley


மே,16,2013. Cloning முறையில் மனிதக் கருவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க அறிவியலாளர்கள் அறிவித்திருப்பது, மனித மாண்பை அழிக்கும் ஒரு முயற்சி என்று அமெரிக்காவின் கர்தினால் ஒருவர் கூறினார்.
"Cell" என்ற பெயரில் வெளியாகும் ஒரு மருத்துவ ஆய்வியல் இதழில் இப்புதனன்று வெளியான ஒரு கட்டுரையில் Oregon பல்கலைக் கழகத்தின் அறிவியலாளர்கள் விடுத்துள்ள அறிக்கையை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்டன் கர்தினால் Sean O'Malley இவ்வாறு கூறினார்.
உடலில் உருவாகும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காணும் ஒரே நோக்கத்துடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவே தவிர, இதனால், மனித உயிர்களை Clone முறையில் உருவாக்குவது தங்கள் ஆய்வின் நோக்கமல்ல என்று ஆய்வுக் குழுவின் தலைவர் Shoukhrat Mitalipov கூறியுள்ளார்.
எனினும், இந்த ஆய்வின் அடிப்படையில் மனித உயிர்களை உருவாக்க நினைப்பவர்கள் இன்னும் விபரீதமான முயற்சிகளில் ஈடுபடுவர் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார் அமெரிக்க ஆயர்கள் அவையின், வாழ்வை வலியுறுத்தும் பணிக்குழுவின் தலைவர் கர்தினால் O'Malley.
மனிதர்களை அவரவர் தேவைகளுக்கு ஏற்ற அளவில் உருவாக்கக்கூடிய 'human engineering' என்ற ஆபத்தான முயற்சிகளுக்கு இத்தகையதோர் ஆய்வு வழிவகுத்துள்ளது என்று குடும்பநல ஆய்வுகள் கழகத்தின் உயர் பேராசிரியர் David Prentice எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.