2013-05-14 15:39:44

விவிலியத் தேடல் – 'நள்ளிரவில் நண்பர்' உவமை: பகுதி 1


RealAudioMP3 உவமைகள் என்ற ஆழ்கடலில் மூழ்கி எடுத்த 'நல்ல சமாரியர்' என்ற முத்தின் அழகை, கடந்த 12 வாரங்கள் பல கோணங்களில் நாம் பார்த்து இரசித்தோம். லூக்கா நற்செய்தி 10ம் பிரிவில் இந்த அற்புதமான உவமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துவரும் 11ம் பிரிவில் முதல் 13 இறைச் சொற்றொடர்கள் 'இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தல்' என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 13 இறைச் சொற்றொடர்களையும் மூன்று பகுதிகளாக நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.
இறைவனிடம் வேண்ட கற்றுத்தருமாறு சீடர்களில் ஒருவர் இயேசுவிடம் கேட்க, அதற்கு இயேசு சொல்லித்தந்த ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே’ என்ற உலகப் புகழ்பெற்ற செபம் முதல் பகுதியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்த நான்கு இறைச் சொற்றொடர்களில், இயேசு, நம்மில் பலருக்கு உருவாகியுள்ள அல்லது உருவாகக்கூடிய ஒரு வாழ்வு அனுபவத்தை எடுத்துரைக்கிறார். இந்த அனுபவத்தை 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையாக விவிலிய ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது 2வது பகுதி. மூன்றாவது பகுதியில், இறைவனிடம் வேண்டுவது குறித்து இயேசு கூறும் சில பாடங்கள் சொல்லப்பட்டுள்ளன.
நான்கு நற்செய்திகளில், லூக்கா நற்செய்தியில் மட்டுமே ‘இறைவனிடம் வேண்டுதல்’ என்ற கருத்தை மையப்படுத்தி மூன்று உவமைகள் சொல்லப்பட்டுள்ளன. 'நள்ளிரவில் நண்பர்' என்ற இந்த உவமை, லூக்கா நற்செய்தியின் 11ம் பிரிவிலும், 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்', பரிசேயரும் வரிதண்டுபவரும்' என்ற வேறு இரு உவமைகள் 18ம் பிரிவிலும் சொல்லப்பட்டுள்ளன. ‘இறைவனிடம் வேண்டுதல்’ என்ற வாழ்வின் மிக முக்கிய அம்சத்தை இந்த மூன்று உவமைகளின் வழியாக அடுத்த சில விவிலியத் தேடல்களில் நாம் சிந்திக்க முயல்வோம். 'நள்ளிரவில் நண்பர்' என்ற இந்த உவமையில் நம் தேடலை இன்று துவக்குகிறோம்.

நான்கு நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான உவமைகள், "இயேசு கூறிய உவமை" என்ற முன்னுரை வார்த்தைகளுடன் ஆரம்பமாகின்றன. ஆனால், இயேசு கூறிய இந்த நிகழ்வுக்கு 'உவமை' என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. எனினும், தான் சொல்லித்தர விழைந்த ஒரு பாடத்தை மக்கள் மனதில் பதிக்க, அவர்கள் வாழ்வில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இயேசு ஒரு சூழலை விவரிக்கிறார். இயேசு சுட்டிக்காட்டிய இந்த சாதாரண அனுபவத்தை லூக்கா நற்செய்தி 11ம் பிரிவின் 5 மதல் 8 முடிய உள்ள இறைச்சொற்றோடர்களில் நாம் கேட்போம்:
லூக்கா நற்செய்தி 11 : 5-8
மேலும் இயேசு அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லைஎன்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாதுஎன்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மக்களின் எளிய வாழ்வுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட நிகழ்வுகளை இயேசு தன் உவமைகளில் பயன்படுத்தினார் என்பதற்கு இப்பகுதி மற்றொரு சான்று. கதை சொல்லும் கலையை இயல்பாகவே பெற்றிருந்தவர் இயேசு என்பதற்கு இந்த வாழ்வு அனுபவம் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இயேசு கூறிய இந்த வாழ்க்கை அனுபவத்தைக் கேட்கும்போது, விருந்தோம்பல், நட்பு ஆகிய பாடங்களைச் சொல்லித்தர இயேசு விழைந்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், இப்பகுதிக்கு முன்னதாக, நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ள புகழ்பெற்ற செபத்தையும், இப்பகுதியின் இறுதியில் இயேசு கூறும் வார்த்தைகளையும் இணைத்துப் பார்க்கும்போது, இந்த வாழ்க்கை அனுபவத்தின் வழியாக 'இறைவனிடம் வேண்டுதல்' என்பது பற்றி இயேசு சொல்லித்தர விழையும் வேறு பல பாடங்கள் தெளிவாகின்றன.
லூக்கா நற்செய்தி 11ம் பிரிவின் ஆரம்ப வரிகள் இதோ:
லூக்கா 11 : 1
இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்என்றார்.

இந்த ஆரம்ப வரிகளை ஒரு சிறு கற்பனைக் காட்சியாகக் காண முயல்வோம். இயேசு தனிமையான ஓரிடத்தில் செபித்துக் கொண்டிருக்கிறார். அவர் வழக்கமாக தன் பணிகளை முடித்துவிட்டு, தனிமையான ஓரிடம் சென்று செபித்தார் என்ற வார்த்தைகளை நாம் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளில் ஒரு சில இடங்களில் காண்கிறோம்.
மத்தேயு 14: 23
மக்களை அனுப்பிவிட்டு, இயேசு தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.
மாற்கு 1: 35
இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.
லூக்கா 5: 16
இயேசுவோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.
லூக்கா 6: 12
அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.

மாலையில், இரவில், அல்லது விடியற்காலையில்... என்று பல நேரங்களை ஒதுக்கி, இயேசு தனித்து செபித்ததை சீடர்கள் அடிக்கடி பார்த்தவர்கள். இன்றும் அதேபோல் அவர் செபத்தில் ஆழ்ந்திருந்ததை சற்று தூரத்தில் இருந்து பார்க்கின்றனர். செபத்தில் ஆழ்ந்திருக்கும் இயேசுவிடம் அற்புதமான மாற்றங்கள் உருவாவதை சீடர்கள் அடிக்கடி பார்த்திருக்க வேண்டும். சீடர்களில் மூவர், அதாவது, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோர், சிறப்பான ஒரு வாய்ப்பைப் பெற்றவர்கள். செபத்தில் மூழ்கியிருந்த இயேசு தோற்றம் மாறியதை அவர்கள் மூவரும் ஒரு மலையுச்சியில் கண்டனர் என்பதை மத்தேயு (17: 1-13), மாற்கு (9: 2-8) லூக்கா 9: 28-36) நற்செய்திகளில் நாம் வாசிக்கிறோம்.

அன்றும் செபத்தின்போது இயேசுவிடம் உருவான மாற்றங்களை சற்று தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சீடர்களில் ஒருவர் ஆவலுடன் இயேசுவிடம், ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்என்று கேட்கிறார். 'யோவான்' என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவர் 'திருமுழுக்கு யோவான்' என்பதை நாம் எளிதில் யூகிக்கலாம். திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்கு எவ்வகை செபங்களைக் கற்றுத்தந்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், சீடரின் இந்த ஆர்வமான விண்ணப்பத்திற்கு விடையாக "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: ..." (லூக்கா 11: 2) என்று இயேசு சொன்ன பதில், காலத்தால் அழியாத ஒரு செபமாக அமைந்துள்ளது.
மத்தேயு நற்செய்தி 6ம் பிரிவிலும், லூக்கா நற்செய்தி 11ம் பிரிவிலும் நாம் காணும் இந்தப் புகழ்மிக்க செபம், இறைவனின் குழந்தைகள் தங்கள் விண்ணகத் தந்தையை நோக்கி எழுப்பும் செபம்.
கிறிஸ்தவ உலகில் கத்தோலிக்கத் திருஅவையினர், ஆங்கிலிக்கன் சபையினர், லூத்தரன் சபையினர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என்று பல பிரிவுகள் இருந்தாலும், அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான அம்சம், இயேசு சொல்லித்தந்த இந்தச் செபம்.
மிக எளிதான ஏழு விண்ணப்பங்கள் அடங்கிய இந்த செபம், கிறிஸ்தவர்களிடையே மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு மதத்தவரிடையிலும் பரவலாக பயன்படுத்தப்படும் செபம் என்று கூறலாம். உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள செபமாகவும் இது அமைந்துள்ளது. இக்கண்ணோட்டத்தில் காணும்போது, இயேசு சொல்லித்தந்த ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே’ என்ற இச்செபம், ‘உலகக் குடும்பத்தின் வேண்டுதல்’ Universal Prayer என்று தயக்கமின்றி கூறலாம்.

லூக்கா நற்செய்தி 11ம் பிரிவில் முதல் நான்கு இறைச் சொற்றொடர்களில் இந்த உலகப் புகழ்பெற்ற செபமும், 9 முதல் 13 முடிய உள்ள ஐந்து இறைச்சொற்றோடர்களில் கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும் என்ற புகழ்பெற்ற சொற்களும் உள்ளன. இவ்விரு புகழ்பெற்ற பகுதிகளுக்கு இடையே, 5 முதல் 8 முடிய உள்ள நான்கு இறைச் சொற்றொடர்களில் இயேசு பகிர்ந்துகொள்ளும் வாழ்வு அனுபவம் எளிதில் மறக்கப்படும் பகுதியாக அமைந்துவிட வாய்ப்பு அதிகம் உண்டு. அப்பகுதியில் இயேசு கூறும் எளியதோர் அனுபவத்தை 'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையாக நாம் அடுத்த வாரம் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.