2013-05-14 16:14:59

பாகிஸ்தான் தலத்திருஅவை புதிய பிரதமருடன் உரையாடல்


மே,14,2013. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்கள் முடிந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்கவுள்ளவேளை, அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு இயக்குனர் அருள்பணி இம்மானுவேல் யூசாப்.
நவாஸ் ஷெரீப் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நல்ல அணுகுமுறையைக் கொண்டிருப்பவர் என்றுரைத்த அருள்பணி இம்மானுவேல், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டு, நல்ல எதிர்காலம் அமையும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பொதுத்தேர்தல்கள் நியாயமாகவும், ஒளிவுமறைவின்றியும் நடந்ததாகவும், தற்போது மக்கள் பயமின்றி இருப்பதாகவும், பாகிஸ்தான் சனநாயகத்துக்கு நல்ல அடையாளம் தெரிவதாகவும் அக்குரு கூறினார்.
இதற்கிடையே, நவாஸ் வெற்றி பெற்றதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்து இந்தியாவுக்கு வருகைதரும்படி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற நவாஸ் ஷெரீப், தன்னுடைய பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.