2013-05-13 16:16:47

வாரம் ஓர் அலசல் - பாமரரின் பார்வையும், பரமனின் பார்வையும் வெவ்வேறல்ல


மே,13,2013. RealAudioMP3 கமிலா அந்தோணியா அமரந்தா வலேஹோ டவ்லிங்! (Camila Antonia Amaranta Vallejo Dowling). இந்த 25 வயது சிலே நாட்டு இளம்பெண், சிலே நாட்டில் 2011ம் ஆண்டு ஏப்ரலின் இறுதியில் எல்லாருக்கும் தரமான கல்வி என்ற இயக்கத்தைத் தொடங்கி அதை 2012ம் ஆண்டு ஏப்ரல்வரை நடத்திச் சென்றவர். சிலே பல்கலைக்கழகத்தில் படித்த வலேஹோ, உலகின் சக்தி வாய்ந்த 100 ஆளுமைகளில் ஒருவர் என டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது. 2011ம் ஆண்டின் மிகச் சிறந்த ஆளுமை என இவரைப் பரிந்துரைத்தது கார்டியன் பத்திரிகை. உலகின் துணிச்சல் மிக்க 150 பெண்மணிகளில் இவரும் ஒருவர் எனப் புகழாரம் சூட்டியது நியூஸ்வீக் பத்திரிகை. உலகின் மிக அழகான புரட்சியாளர்’ என்று பாராட்டியது நியூயார்க் டைம்ஸ். இவரது டுவிட்டர் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஏழு இலட்சத்தை எட்டவிருக்கிறது. அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் தரமான கல்வி என்ற கோரிக்கைகளுடன் போராடிவரும் இந்தப் பெண், சிலே நாட்டின் மாபெரும் மாணவர் தலைவராக உருவெடுத்திருக்கிறார். இலட்சக்கணக்கான மாணவர்கள், இவரது ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் களத்தில் நிற்கின்றனர். 25 வயதேயான கமிலா வலேஹோ, ஆளும் கட்சிக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்தார். அடக்குமுறைகளை ஏவிப் போராட்டங்களை முடக்கப் பார்த்த சிலே அரசு, இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தி, கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவதாகச் சொன்னது. ஆனால், அது வெறும் கண்துடைப்பாகவே இருந்தது. சில காலம் சற்றே அடங்கியிருந்த இப்போராட்டம், கடந்த மாதம் தீவிரம் கொண்டது. நாடு முழுவதும் இரண்டரை இலட்சம் மாணவர்கள் திரண்டனர். இப்போதும் மாணவர்கள் அடங்கவில்லை. இலக்கை அடையும்வரை விடாமல் போராடுகின்றனர். இம்மாணவர் போராட்டங்களை வழிநடத்தும் கமிலா வலேஹோ இவை குறித்துப் பேசியபோது...
RealAudioMP3 அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதே எங்களது இறுதி இலக்கு. இலவசக் கல்வி என்பது சலுகை அல்ல; அது எங்கள் உரிமை. அரசு சொல்லும் பணத்தைக் கட்டும் அளவுக்கு எனக்கு வசதி இருக்கிறது. மகிழ்ச்சியாக அரட்டையடித்து நண்பர்களுடன் பொழுதுபோக்க வயதும் இருக்கிறது. ஆனால், நான் விரும்புவது அதை அல்ல. என்னைப்போல அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி கிடைக்க வேண்டும். அதுவரையிலும் நாங்கள் போராட்டங்களை விடப்போவது இல்லை...
என்று சொல்லியிருக்கிறார் உறுதியாக. இலவசக் கல்விக்காக கமிலா வலேஹோ நடத்திய போராட்டங்கள்தான் உலக அளவில் இவர் பேசப்படுவதற்குக் காரணம். இன்று கல்வி உலகம் முழுவதுமே வியாபாரப் பொருளாகிவிட்டது. சிலேயில் இலட்சக்கணக்கில் செலவழிக்காமல் ஆரம்பக் கல்வியை முடிக்க முடியாது. கல்லூரி வரையிலும் படிக்க வேண்டுமெனில், இன்னும் பலப்பல இலட்சங்கள் வேண்டும். இந்தப் பணத்தைக் கட்ட முடியாதவர்கள் படிக்கவும் முடியாது. அப்படியே படிப்பவர்கள் கல்விக்கடன் மூலமே படிக்கிறார்கள். ஏழை, நடுத்தரவர்க்க மக்களைப் படிக்கவிடாமல் துரத்தி அடிக்கும் இந்த மோசமான நிலைமைக்கு எதிராக மாணவர்களைத் திரட்டிப் போராடி வருகிறார் கமிலா வலேஹோ.
பெண் கல்விக்காக உயிரையும் தியாகம் செய்வேன் என்று சபதம் எடுத்துள்ள பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசாப்சாய் (Malala Yousafzai) பற்றித் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பாகிஸ்தானின் Swat பள்ளத்தாக்கில் அனைத்துப் பெண்கள் பள்ளிகளும் 2009ம் ஆண்டு சனவரி 15ம் தேதியோடு மூடப்படும் என்று தலிபான் அமைப்பினர் அறிவித்த காலம் அது. அப்போது அந்த அமைப்பினரைக் கண்டித்தும், பெண் கல்விக்காக கட்டுரைகள் எழுதியும் வந்தவர் 15 வயதே நிரம்பிய சிறுமி மலாலா. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த அமைப்பினர், சிறுமியைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். பலத்த காயம் அடைந்த அச்சிறுமி, இங்கிலாந்தில் தீவிரச் சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தார். அதற்குப் பின்னர் நன்கு பார்க்கவும் பேசவும் அச்சிறுமியால் முடிகிறது. தான் குணமடைந்தது குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்த மலாலா...
உலகில் உள்ள நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையால் கடவுள் மீண்டும் 2வது முறையாக எனக்குப் புதிய வாழ்க்கையை அளித்துள்ளார். நான் மீண்டும் நிச்சயம் பெண்களுக்காகத் தொண்டு செய்வேன். ஒவ்வொரு பெண்ணும், குழந்தையும் நிச்சயம் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதே எனது குறிக்கோள். இதற்காக அறக்கட்டளை ஒன்று நிறுவ முடிவு செய்துள்ளோம். இதில் திரட்டப்படும் நிதி பாகிஸ்தானில் உள்ள பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கு செலவிடப்படும்
என்று கூறினார RealAudioMP3 ். மேலும், பாகிஸ்தானில் கடந்த வாரத்தில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் அனைவரும் வாக்களியுங்கள் என்று சிறுமி மலாலா இலண்டனில் இருந்து தெரிவித்துள்ளார். தலிபான்களால் சுடப்பட்டு இங்கிலாந்தில் பெற்ற சிகிச்சைக்குப் பிறகு தற்போது இலண்டனில் படித்து வரும் சிறுமி மலாலா, நாட்டில் மாற்றம் காண அனைவரும் வாக்களியுங்கள் என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.
அன்பர்களே, இளம்பெண் கமிலா வலேஹோவும் சரி, சிறுமி மலாலா யூசாப்சாயும் சரி தங்கள் உயிரைப் பணயம் வைத்து பொதுநலனுக்காகப் போராடி வருகிறார்கள், அனைவரும் தங்களது உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும் என்ற பிறர்நல நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் முதல் புனிதராக உயர்ந்துள்ள அன்னை Laura Montoya, அக்காலத்தில் பழங்குடி மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். கொலம்பிய அரசுத்தலைவர் உட்பட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் இஞ்ஞாயிறன்று கலந்து கொண்ட திருப்பலியில் அன்னை Laura Montoya அவர்களைப் புனிதர் என அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், நாம் அனைவரும் தனிமனிதக்கோட்பாடு, பாராமுகம், முற்சார்பு எண்ணம் ஆகியவற்றைக் களைந்து ஒவ்வொருவரும் நம்மிடமுள்ள மிகச் சிறந்ததை அன்போடு கொடுக்க வேண்டும் எனக் கூறினார். அதேபோல் மெக்சிகோவின் புதிய புனிதர் Maria Guadalupe García Zavala பற்றிச் சொல்லும் போதும், நாம் ஒவ்வொருவரும் நமது சொந்தப் பிரச்சனைகள், நமது சொந்தக் கருத்துக்கள் என்று நமக்குள்ளே முடங்கிவிடாமல் அவைகளைவிட்டு வெளியே வந்து, நமது கரிசனையும் புரிந்து கொள்ளுதலும், ஆதரவும் தேவைப்படும் மக்களைச் சந்திக்க வேண்டும், இதன்மூலம் இயேசு நம்மை அன்பு கூருவதுபோல நாமும் பிறரை அன்புகூர முடியும் என்று சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 மே 12, அன்னை தினம். தாதியர் தினம். நம் தாய்மார்களும் சரி, தாதியரும் சரி தங்களையே மறந்து சேவை செய்பவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களிடம் அன்பும் ஆதரவும் காட்டுபவர்கள். இந்த நமது அன்பும் ஆதரவும் உலகில் பலருக்குத் தேவைப்படுகின்றது. இஞ்ஞாயிறன்று மனிதன் என்ற இணையதளத்தில் ஒரு சிறு நிகழ்ச்சி பதிவாகியிருந்தது. இது கதை அல்ல, உலகில் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் என்ற தலைப்பில் அந்நிகழ்ச்சி வெளியாகியிருந்தது.
வசதியுள்ள ஒரு வீட்டில் விருந்து ஒன்று நடக்கிறது. பிரியாணி சாப்பாடு. வந்தவர்கள் அனைவரும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு இலையிலும் சாப்பாட்டை மீதம் வைத்துவிட்டுச் சென்றனர். அவ்விருந்தில் ஒரு தாய் தனது மகனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். போதும் போதும் என்று மகன் சொன்னாலும் அந்தத் தாய் விடுவதாக இல்லை. எதிரில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மருத்துவரிடம் நன்றாகச் சாப்பிடுவதற்கு டானிக் கேட்கிறார். இவையனைத்தையும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார் அவ்வீட்டில் வேலை செய்யும் ஓர் ஏழைச் சிறுமி. எச்சில் இலைகள் அனைத்தையும் குப்பையில் கொட்டியபோது அவற்றில் மீதமிருந்த பிரியாணிச் சாப்பாட்டைப் பார்த்து ஏங்குகிறார் அச்சிறுமி. சாப்பிட்டுவிட்டு கைகழுவும் மருத்துவரிடம், டாக்டர், பசிக்காமல் இருப்பதற்கு எனக்கு, என் தம்பிக்கு, என் அம்மாவுக்குமென 3 டானிக் பாட்டில்கள் எழுதிக்கொடுங்கள் என்றும் கேட்கிறார் அச்சிறுமி. ஏனெனில் முந்தைய நாள் இரவில் தனது நோயாளித் தாய்க்கும், தம்பிக்கும் வீட்டில் இருந்த சாதத்தைப் போட்டுவிட்டு, எஞ்சியிருந்த சிறிது சாதத்தைத் தனது தட்டில் வைத்தார். உடனே அவரது தம்பி, அக்கா, எனக்கு இன்னும் சாதம் வேண்டும் எனக் கேட்க, தனது தட்டிலிருந்த கொஞ்சத்தையும் தம்பி தட்டில் போட்டுவிட்டு தண்ணீரைக் குடித்து தனது பசியைப் போக்கிக் கொண்டார் அச்சிறுமி. அன்று அந்த எஜமானி அம்மா மீதமிருந்த பிரியாணியைத் தனக்குக் கொடுப்பார் என்று பசியோடு ஏங்கினார் அச்சிறுமி. ஆனால் சமையல் பாத்திரத்தில் மீதமிருந்த சாப்பாட்டையும் நாய்க்குப் போடும்படி எஜமானி அம்மா சொல்லிவிட்டார். இந்தச் சிறுமிக்கு குளிர்சாதனப்பெட்டியிலிருந்த கொஞ்சம் பழைய சாதம்தான் அன்று கிடைத்தது.
அன்பர்களே, இப்படி வறுமையில் வாடும், தேவையில் இருக்கும் மக்களுக்கு நமது அன்பும் ஆதரவும் தேவைப்படுகின்றது. நாம் வீணடிக்கும் உணவுப்பொருள்கள், உணவுகள், அலமாரியில் ஆண்டுக்கு ஒருதடவை மட்டும் உடுத்திவிட்டு ஆண்டுக்கணக்காய் அடுக்கி வைத்திருக்கும் உடைகள், புழக்கத்தில் இல்லாமல் அழகுக்காக மட்டும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், குப்பைத்தொட்டியில் போடும் பழைய புத்தகங்கள், பழைய நோட்டுகள், பழைய புத்தகப் பைகள் இப்படி அனைத்தும் பலருக்குத் தேவைப்படுகின்றது. இப்படி, தேவையில் இருப்போர் பட்டியல் நீள்கின்றது. நமது பிறர்நலப்பண்பும் விரிவடைய வேண்டியிருக்கின்றது.
அன்பர்களே, நமது உதவி தேவைப்படும் இந்தப் பாமர உள்ளங்களின் ஏக்கப்பார்வையும், பரமனின் பார்வையும் வெவ்வேறல்ல. இந்தச் சின்னஞ்சிறுவருக்குச் செய்யும் சிறு உதவியும் இறைவனுக்கே செய்வதாகும் என்பதை நெஞ்சில் ஆழமாகப் பதிப்போம்.







All the contents on this site are copyrighted ©.