2013-05-13 17:04:02

தூய ஆவியார் அதிகம் அறியப்படாத, அல்லது அதிகம் மறக்கப்பட்ட இறைவனாக விளங்குகிறார் - திருத்தந்தை


மே,13,2013. நம் நம்பிக்கை வரலாற்றையும், இறைவனிடமிருந்து நாம் பெறும் கொடைகளையும் நினைவுறுத்தும் தூய ஆவியாரின் அருளின்றி, நாம் சிலை வழிபாட்டில் ஈடுபடும் ஆபத்து உள்ளதென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
"தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்று திருத்தூதர் பணிகள் நூலில் (19 : 2) எபேசு சீடர்கள் புனித பவுல் அடியாரிடம் கூறிய வார்த்தைகளை மையப்படுத்தி, இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான மூவொரு கடவுள் என்ற மறையுண்மையில், தூய ஆவியார் அதிகம் அறியப்படாத, அல்லது அதிகம் மறக்கப்பட்ட இறைவனாக விளங்குகிறார் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இறைவனையும் அவர் வழங்கும் கொடைகளையும் மறந்துவிட்டு வாழும் நமக்கு மீண்டும் இவற்றை நினைவுறுத்தி வழிநடத்துபவர் தூய ஆவியாரே என்றும், இவரை மறந்து வாழ்வது இறைவனை சிலையாக மட்டுமே காணும் ஓர் ஆபத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்றும் திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.
"என் தினசரி வாழ்வில் கிறிஸ்துவுக்கு நான் நம்பிக்கையுள்ள மனிதராக வாழ்கிறேனா? மதிப்போடும், அதேநேரம், துணிவோடும் என் நம்பிக்கையை மற்றவர்களுக்கு 'வெளிக்காட்ட' என்னால் முடிகிறதா?" என்ற கேள்விகள் அடங்கிய Twitter செய்தியை இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எட்டு மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.