2013-05-11 15:26:34

கற்றனைத் தூறும் புதிய புனிதர்கள்...


Ottomon என்று அழைக்கப்பட்ட துருக்கிய பேரரசால் 1480ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கொல்லப்பட்ட 800க்கும் அதிகமான இத்தாலியர்களை, மே மாதம் 12ம் தேதி, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக உயர்த்துகிறார். இத்தாலியின் தென் கோடியில் அமைந்துள்ள Otranto என்ற ஊரை, Ottomon படையினர் முற்றுகையிட்டனர். இருவாரங்கள் நீடித்த இந்த முற்றுகையின்போது, அவ்வூரில் இருந்த அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தப்பட்டனர். உயிருக்குப் பயந்து, கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஒரு குரு அவர்களுக்கு அறிவுரை கூறியும், அவ்வூர் மக்கள் மதம் மாற மறுத்தனர். எனவே, அவ்வூரில் இருந்த 15 வயதுக்கு மேற்பட்ட 800 ஆண்களை ஊருக்கருகே அமைந்திருந்த ஒரு சிறு குன்றுக்கு கொண்டு சென்றனர், படைவீரர்கள்.
மலையுச்சியில் அவர்களிடம் மதம் மாற இறுதி வாய்ப்பளிப்பதாகக் கூறிய படைவீரர்களிடம், Otranto நகரில் தையல் வேலை செய்துவந்த Antonio Primaldo என்பவர், "நாங்கள் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம். அவருக்காக, இறக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று துணிவுடன் சொன்னார். அவர் காட்டிய துணிவு அங்கு நின்ற அனைவரிடமும் பரவியது. எனவே அவர்கள் அனைவரும் துணிவுடன் மரணத்தை எதிர் கொண்டனர்.
அன்று, அந்தக் குன்றின் மீது நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு மரபுவழி கதை உண்டு. அதாவது, அங்கிருந்தோர் அனைவரிலும், Antonio Primaldo அவர்களின் தலையே முதலில் வெட்டப்பட்டது. ஆனால், அவரது உடல் நிலத்தில் சாயாமல் நின்றது. வீரர்கள் அவ்வுடலைத் தள்ளியபோதும், அது அசையாமல் நின்றது. அங்கிருந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னர், இறுதியில் Antonio அவர்களின் உடல் தரையில் வீழ்ந்ததென்பது மரபுவழிக் கதை. இந்த மறைசாட்சிகள் அனைவரும் மே 12, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக உயர்த்தப்படுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.