2013-05-10 16:33:12

முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்துக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு


மே,10,2013. இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இச்சந்திப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எகிப்துக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார் அந்நாட்டின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros.
1973ம் ஆண்டு மே 4ம் தேதி முதல் 10ம் தேதிவரை அப்போதைய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda, திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களை வத்திக்கானில் சந்தித்தது மற்றும் இவ்விரு தலைவர்களும் பொதுவான அறிக்கையில் கையெழுத்திட்டது குறித்தும் குறிப்பிட்டார் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros.
கத்தோலிக்கத் திருஅவைக்கும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நிலவும் சகோதரத்துவ அன்பைக் கொண்டாடும் நாளாக, ஒவ்வோர் ஆண்டும் மே 10ம் தேதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்ற தனது ஆவலை வெளியிட்டார் முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros.
கத்தோலிக்கத் திருஅவைக்கும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே தற்போது உருவாகியிருக்கும் சிறப்பான உறவுகள் இன்னும் உறுதியும் வளமையும் பெற வேண்டும் என்ற தனது ஆவலைத் தெரிவித்த முதுபெரும் தலைவர் இரண்டாம் Tawadros, இப்பூமியில் அமைதி மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கு சேர்ந்து உழைப்பதை, இவ்விரு சபைகளும் பொதுவான நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
அலெக்சாந்திரியா காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை முதல் நூற்றாண்டில் நற்செய்தியாளர் புனித மாற்கு அவர்களால் நிறுவப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.